பெண்ணிடம் ஆபாச செய்கை? ஓட்டல் ஊழியரை சரமாரியாக தாக்கிய குடும்பத்தினர்

பெண்ணிடம் ஆபாச செய்கை? ஓட்டல் ஊழியரை சரமாரியாக தாக்கிய குடும்பத்தினர்

சாப்பிட வந்த இடத்தில் பெண்ணிடம் சேட்டை செய்ததாக, ஓட்டல் ஊழியரை பெண்ணின் குடும்பத்தினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உணவு வாங்க வந்துள்ளனர்.

அப்போது உணவகத்தில் பில் போடும் பணி செய்யும் ஊழியர் அந்த குடும்பத்தில் இருந்த ஒரு பெண்ணை பார்த்து தவறான செய்கை காட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது குடும்பத்தினரிடம் இதுபற்றி அந்த பெண் கூறியுள்ளார்.

இது குறித்து பெண்ணின் குடும்பத்தினர் ஊழியரிடம் கேட்ட போது, அப்படி ஒன்றும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கடையின் ஊழியரை பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கடைக்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கடையின் ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடையின் ஊழியரை தாக்கியதாக ஓட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.