இந்திய அணியின் பயிற்சியாளரை மாற்றும் திட்டமில்லை - பிசிசிஐ செயலாளர்
இந்திய அணியின் பயிற்சியாளரை மாற்றுவது குறித்து நாங்கள் இதுவரை எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை என்று பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கம்பீர் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் சொல்லிக்கொள்ளும் அளவில் எந்தவித சாதனையையும் இதுவரை படைத்தது இல்லை என்பதே நிதர்னம்.
மாறாக, நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2-0 என்ற கணக்கிலும் ஒயிட்வாஷ் ஆனதுடன், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் இழந்தது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதற்கு மத்தியில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோரும் தங்களின் டெஸ்ட் வாழ்க்கைக்கு குட் பை சொல்லியிருந்தனர்.
அவர்களின் ஓய்வுக்கு பின்னால் கவுதம் கம்பீரின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபோன்ற சூழ்நிலையில் தான் இந்திய அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது. இதனையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என்ற குரல்களும் ரசிகர்கள் பக்கம் இருந்து எழத்தொடங்கி இருந்தன.
மேலும் பிசிசிஐ-யும் கம்பீரின் பயிற்சியாளர் பதவி குறித்து ஆலோசித்து வருவதாகவும், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷமணை நியமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தனர். இந்நிலையில் தான், இந்திய அணியின் பயிற்சியாளரை மாற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை என பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தேவ்ஜித் சைகியா, "இது முற்றிலும் தவறான செய்தி மட்டுமின்றி, யூகத்தின் அடிப்படையிலான செய்தி. எனக்கு வருத்தம் யாதெனில் மிகவும் புகழ்பெற்ற சில செய்தி நிறுவனங்களும் இந்தச் செய்தியை வெளியிட்டு வருகின்றன. இதில் துளியும் உண்மையில்லை. பிசிசிஐ இதை திட்டவட்டமாக மறுக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அணியின் பயிற்சியாளரை மாற்றுவது குறித்து நாங்கள் இதுவரை எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை. மக்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள்ளலாம், ஆனால் பிசிசிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது யாரோ ஒருவரின் கற்பனை கதை. இதில் எந்த உண்மையும் இல்லை. இது உண்மையில் தவறான மற்றும் ஆதாரமற்ற செய்தி என்பதைத் தவிர என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்வார் என்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார். இதனால் இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதுடன், மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.