சதமடித்து மிரட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்; வலுவான ஸ்கோருடன் இந்தியா ஆதிக்கம்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 318 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. அத்துடன், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றிருந்தது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்.10) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படாத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங், ஜோஹன் லெய்ன் ஆகியோருக்கு பதில் ஆண்டர்சன் பிலிப், டெவிம் இம்லாச் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேஎல் ராகுல் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர்.
அதன்பின் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடையை 7ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மறுபக்கம் சதத்தை நெருங்கிய சாய் சுதர்ஷன் 15 பவுண்டரிகளுடன் 87 ரன்களை எடுத்த போது, எல்.பி.டபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 190 ரன்களுக்கு மேல் குவித்து அணியை வலுவான நிலையை நோக்கி அழைத்துச் சென்றனர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில்லும் நிதானம் காட்ட, மறுபக்கம் அதிரடியைக் கைவிடாத யஷஸ்வி ஜெய்ஸ்வால் 150 ரன்களையும் கடந்தார். இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 318 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 பவுண்டரிகளுடன் 173 ரன்களையும், ஷுப்மன் கில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களையும் சேர்த்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜோமல் வாரிக்கன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து வலுவான முன்னிலையுடன் இந்திய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.