ஆன்லைன் செயலி மூலம் பெற்ற கடனை அடைக்க மூதாட்டி கொலை

ஆன்லைன் செயலி மூலம் பெற்ற கடனை அடைக்க மூதாட்டி கொலை

வாணியம்பாடி அருகே மாட்டுக் கொட்டகையில் வைத்து மூதாட்டியை கொலை செய்து, தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் பவுனம்மாள் (65). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது இரு பிள்ளைகளும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ள நிலையில், மூதாட்டி பவுனம்மாள் அதே பகுதியில் தனிமையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி அதே பகுதியில் ஏரிக்கரையோரம் உள்ள தனது மாட்டுக் கொட்டகைக்கு வந்துள்ளார். அப்பொழுது, அவரை யாரோ கை, கால்களை துணியால் கட்டி, கழுத்தை நெறித்து, தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு, மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்ற இளைஞர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அவரை அம்பலூர் காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சிகர தகவல் வெளியானது.

அதன்படி, முருகன் செல்போனில் ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பல ஆயிரம் ரூபாய் கடன் பெற்று உள்ளார். அதனை திருப்பி செலுத்த முடியாததால், மூதாட்டி பவுனம்மாளிடம் உள்ள தங்க நகையை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி இருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி பவுனம்மாள், தனியாக மாட்டுக்கொட்டகைக்கு வந்த போது, அவரை கை, கால்களை கட்டி வைத்து, கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். அதன் பின்னர் மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செல்போன் செயலி மூலம் பெற்ற கடனை அடைப்பதற்காக, மூதாட்டியை கொலை செய்து, தங்க நகையை பறித்துச்சென்ற இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.