'சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறோம்...' - பிரேமலதா ஆவேசம்

'சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறோம்...' - பிரேமலதா ஆவேசம்

தேமுதிக நிதி கேட்பதால் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படாமல் உள்ளதா? என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமடைந்தார்.

திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் உரையாடினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ''தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பிற மாநிலத்திலிருந்து இங்கு வந்து பணியாற்றிக் கொண்டிருந்த குடும்பம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எல்ஐசி அதிகாரி கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில், காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை இன்னும் தீவிர படுத்த வேண்டும்.

2011 தேர்தலுக்குப் பிறகு தேமுதிக தனித்துப் போட்டியிடவில்லை. தேமுதிக யாருடன் கூட்டணி என்பது தான் தமிழ்நாட்டில் தற்போதைய தலைப்புச் செய்தியாக உள்ளது. ஒரு முடிவு எடுத்தால், அதில் நாங்கள் தீர்க்கமாக இருப்போம். யாருடனும் தேமுதிக பேரம் பேசவில்லை, எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் அந்த கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். தேமுதிக கூட்டணி அமைக்கும் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தோழமைக் கட்சிகள் தான். யாருடனும் நாங்கள் தற்போது வரை கூட்டணி குறித்து பேசவில்லை. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. பிப்ரவரி 3 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அதற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்போம்.'' என்றார்.

தேமுதிக நிதி கேட்பதால் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படாமல் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''சொந்த பணத்தில் கட்சி நடத்தி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் லஞ்சம் மற்றும் கையூட்டு பெற்ற நபர்கள் பட்டியலில் தேமுதிக இருக்கிறதா? தவறான கேள்விகளை கேட்க வேண்டாம்'' என ஆவேசம் அடைந்தார்.