சென்னையில் உணவு டெலிவரி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் - கத்தியால் வெட்டி ரீல்ஸ் போட்ட கொடூரம்

சென்னையில் உணவு டெலிவரி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் - கத்தியால் வெட்டி ரீல்ஸ் போட்ட கொடூரம்

சென்னை: வேளச்சேரியில் பொதுமக்கள் மத்தியில் உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞரை, சரமாரியாக வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள மூவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக நடைபெறும் கொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2024-ஆம் ஆண்டில் மட்டும், தமிழகத்தில் 1,540 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்தாண்டு சென்னையில் மட்டும் சுமார் 93 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சென்னை வேளச்சேரி நேரு நகரில் உள்ள ஏ.எல்.முதலியார் தெருவில் உணவு டெலிவரி செய்ய வந்த இளைஞர் ஒருவரை, இரண்டு பேர் சேர்ந்து பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அதனை வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைத்தளத்திலும் ரீல்ஸாக பதிவிட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை, கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெட்டுப்பட்டவர் எழுந்து ஓட முடியாமல், படுத்தவாறே தனது கைகளால் தற்காத்துக் கொள்ள முயற்சித்தும், தொடர்ந்து பலமுறை அவரை அந்த கும்பல் வெட்டியுள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலர், கற்களை வீசியும், காலணியை வீசியும் அந்த இளைஞரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, வேளச்சேரி காவல் நிலைத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடம் விரைந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து இளைஞரை தாக்கி நபர்கள் யார், எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்ற கோணங்களில் விசாரணை நடத்தினர்.

மேலும், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய இளைஞரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை, 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

விசாரணையின் அடிப்படையில், விஷ்ணு, நந்தா, சுந்தர் ஆகிய மூன்று பேரை வேளச்சேரி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தலைமறைவாக இருக்கும் மூவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட விஷ்ணு, நந்தா மற்றும் சுந்தர்
கைது செய்யப்பட்ட விஷ்ணு, நந்தா மற்றும் சுந்தர் 

முதற்கட்ட விசாரணையில், வெட்டுப்பட்ட இளைஞரின் பெயர் பார்த்திபன் என்பதும், குடிபோதையில் பார்த்திபனை கும்பல் ஒன்று வெட்டியதும் தெரியவந்துள்ளது. சென்னையில்பல முக்கிய இடங்களில் ஒன்றான வேளச்சேரியில் இதுபோன்ற குற்றச்சம்பவம் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.