“இதயமே நொறுங்கிவிட்டது”.. காஸாவுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

காஸாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கில் இன்று (அக்.8) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டுக் கொடியுடன் பங்கேற்றனர்.
தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் உலகையே உலுக்கி கொண்டிருக்கிறது. பன்னாட்டு உரிமை சட்டங்களையும், ஐ.நா-வின் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறும் இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இதயமே நொறுங்கிவிட்டது
மனிதநேய சிந்தனை கொண்ட ஒவ்வொருவரும் காஸா இனப்படுகொலையை கண்டிக்கிறோம். பாலஸ்தீன மக்களுக்கு நம் மனிதாபிமானமான ஆதரவை வழங்குகிறோம். கடந்த ஓராண்டாக காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதில், 11 ஆயிரம் பெண்கள், 17 ஆயிரம் குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள், 125 ஐநா ஊழியர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 26 ஆயிரம் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர்.
லட்சக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் காஸாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் போராடி வருகிறார்கள். மேலும், பட்டினியால் வாடி உணவு ஏற்றி வந்த லாரிக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் 45 பேரை இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது. உணவுக்காக காத்திருந்தவர்களை கொலை செய்த செய்தியைக் கேட்டதும் என்னுடைய இதயமே நொறுங்கியது.
இரக்கமற்ற இனப்படுகொலைகள்
மேலும், காஸாவுக்கு உணவு, மருந்து, பால் பவுடர் போன்றவைகளை எடுத்து சென்ற 47 நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்களை இஸ்ரேல் கைது செய்துள்ளது. இப்படி, பன்னாட்டு சட்டங்களை மீறும் செயலை கண்டிக்காமல் இருக்க முடியுமா? காஸாவில் நடந்து வரும் இரக்கமற்ற இனப் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சியை ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
உலக அமைதியே முக்கியம்
காஸா இனப் படுகொலையை தடுக்க இஸ்ரேல் மற்றும் அதன் தொடர்புடைய நாடுகளுக்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஐநா மற்றும் பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து அமைதியை நிலைநாட்டவும், மனிதாபிமான உதவிகளை செய்யவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உயிர்கள் விலைமதிப்பில்லாதது. மனிதாபிமானம் கொண்ட யாரும் வேறு நாட்டின் பிரச்சனை என்று ஒதுங்கி போக முடியாது. நமக்கு உலக அமைதிதான் முக்கியம்.