மின்கட்டண பாக்கியை கேட்ட இடத்தின் உரிமையாளர் கொலை : 3 பேருக்கு ஆயுள் தண்டனை

மின்கட்டண பாக்கியை கேட்ட இடத்தின் உரிமையாளர் கொலை : 3 பேருக்கு ஆயுள் தண்டனை

போடியில் செங்கல் காளவாசலுக்கான மின் கட்டண பாக்கியை கேட்டதால், இடத்தின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் 67 வயதான ராதாகிருஷ்ணன். முன்னாள் ராணுவ வீரரான இவர், போடியில் தங்கும் விடுதி நடத்தி வந்தார். இவருக்கு போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பகுதியில் சொந்த இடம் இருக்கிறது. அந்த இடத்தில் திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர், வாடகை அடிப்படையில் செங்கல் சூளை நடத்தி வந்தார்.

தனது இடத்திற்கான வாடகையை மாரிமுத்து சரி வர கொடுக்காததால் கடந்த 2022ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் அவரை காலி செய்ய வைத்துள்ளார். மேலும் அந்த இடத்திற்கான மின் கட்டணத்தையும் மாரிமுத்து செலுத்தாமல் வைத்திருந்ததால், அதனை தருமாறு ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். ஆனால் மாரிமுத்து தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உண்டானதில் ராதாகிருஷ்ணனை தீர்த்துக் கட்ட மாரிமுத்து முடிவு செய்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி போடிநாயக்கனூர் தபால் நிலையம் அருகே சிற்றுண்டிக் கடையில் ராதாகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார். அப்போது தனது செங்கல் சூளையில் பணிபுரிந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், மதனக்குமார் ஆகியோருடன் ஜீப்பில் வந்த மாரிமுத்து அவரை வெட்டி கொலை செய்துள்ளார்.

ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் மாரிமுத்து, மதனகுமார், சுரேஷ்குமார்
ஆயுள் தண்டனை பெற்ற மாரிமுத்து, மதனகுமார், சுரேஷ்குமார் 

கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கானது நடைபெற்று வந்த நிலையில், இன்று தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றவாளிகளான மாரிமுத்து, சுரேஷ்குமார், மதனக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அதை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மாரிமுத்துவின் மகன் மனோஜ், சுரேஷ்குமாரின் மகன் யுவராஜா, கரையான் பட்டி மனோகரன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.