கிரிக்கெட்டில் இருந்து மொஹித் சர்மா ஓய்வு
அனைத்து வடிவ கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வேகப் பந்துவீச்சாளர் மொஹித் சர்மா அறிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய குடும்ப உறுப்பினர்கள், ஹரியானா கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானாவை சேர்ந்த மொஹித் சர்மா, இந்திய அணிக்காக 34 போட்டிகளிலும், இந்தியன் பிரிமியல் லீக்கில் 120க்கும் மேற்பட்ட போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக அவர் விளையாடிய போட்டிகளில் 26 போட்டிகள் ஒருநாள் போட்டிகள் ஆகும். எஞ்சிய 8 போட்டிகளும் டி20 போட்டிகள் ஆகும்.
2013-ம் ஆண்டில் முதல்முறையில் சர்வதேச கிரிக்கெட்டில் மொஹித் சர்மா அறிமுகமானார். இதையடுத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 6 விக்கெட்டுகளும் சாய்த்துள்ளார்.
2015ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தலைமையில் அவர் விளையாடியுள்ளார். இதுதவிர்த்து குஜராத், பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளுக்காகவும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார். அப்போட்டிகளில் மொத்தம் 134 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
44 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 127 விக்கெட்டுகளை மொஹித் சர்மா வீழ்த்தியுள்ளார்.