பீகார் தேர்தல் முடிவு: தோற்றாலும் நம்பர் ஒன் இடத்தில் தேஜஸ்வி யாதவ்... இரண்டாம் இடத்தில் நிதிஷ் குமார்!
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் தற்போது வெளியாகியுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் நேற்று வெளியான நிலையில், ஆளும் பாஜக-ஜேடியூ கூட்டணி மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கடந்த தேர்தலை விட சுமார் 5 சதவீதம் அளவுக்கு கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 15.39% வாக்குக்களை பெற்ற அக்கட்சி, இந்த முறை 19.25% வாக்குகள் பெற்றுள்ளது. மேலும் கடந்த தேர்தலில் 43 இடங்களில் மட்டுமே வென்ற அக்கட்சி இந்த முறை கூடுதலாக 42 இடங்களை வென்று மொத்தம் 85 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது.
ஜேடியூவின் கூட்டணி கட்சியான பாஜக இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில், 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 19.46% ஆக இருந்த அதன் வாக்கு வங்கி, இந்த முறை ஒரு சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த முறை 74 இடங்களில் வென்ற அக்கட்சி இந்த முறை 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1980-ல் பாஜக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 45 ஆண்டுகளில் முதல் முறையாக பீகாரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.
அதே போன்று லோக் ஜனசக்தி கட்சி 4.97% வாக்குகளுடன் 19 இடங்களில் வென்றுள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சி 134 இடங்களில் போட்டியிட்டு 5.66% வாக்குதளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாகத்பந்தன் கூட்டணியை பொறுத்தவரையில், இந்த முறை அவர்கள் எதிர்பாராத தோல்வியை பெற்றுள்ளனர். ஒருவேளை தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும், பாஜக-ஜேடியூ கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு தொகுதிகளை கைப்பற்றி விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 35 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த தேர்தலில் இந்த கூட்டணி 125 இடங்களில் வென்றிருந்த நிலையில், தற்போது 77 இடங்களை இழந்து 35 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
ஆனால், ஆர்ஜேடி இந்த முறை பீகாரில் போட்டியிட்ட மற்ற அனைத்து அரசியல் கட்சிகளை விட, அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. 143 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி சுமார் 23 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 23.11% சதவீத வாக்குகளை பெற்று 75 இடங்களில் வென்ற அக்கட்சிக்கு, இந்த முறை 25 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இந்த முறை 61 இடங்களில் போட்டியிட்ட நிலையில், சொற்ப இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 9.48% வாக்குகளை பெற்று 19 இடங்களை வென்ற அக்கட்சி, இந்த முறை 8.71% வாக்குகளை மட்டுமே பெற்று 6 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.