சமகால 'கிரிக்கெட் உலகை ஆளும் அரசன்' விராட் கோலி!
கிரிக்கெட் உலகில் ரன்-மெஷின் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி, இன்று (நவம்பர் 5, 2025) தனது 37வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நவம்பர் 5, 1988 அன்று டெல்லியில் பிறந்த விராட் கோலி இந்திய அணிக்காக கடந்த 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனது ஆரம்பம் காலத்தில் இருந்தே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி, கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை வென்றதிலும் பெரும் பங்கினை வகித்தார்.
அதனைத் தொடர்ந்து மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி தனக்கென தனது சரித்திரத்தையும் படைத்தார். அவரது தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை வென்றதுடன், டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்திற்கு முன்னேறி சாதனையை படைத்திருந்தது.
டி20 உலகக்கோப்பையுடன் விராட் கோலி (IANS)
அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்திய விராட் கோலி, 2019ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரில் அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்ற நிலையில், கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரன்கள் சேர்க்க தவறியதன் காரணமாக, அணியின் கேப்டன் பதிவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, இந்தாண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த விராட் கோலி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அதன் ஒருபகுதியாக சிட்னியில் நடைபெற்ற சமீபத்திய ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் தனது இருப்பை உறுதி செய்துள்ளார்.
இந்தியாவுக்காக இதுநாள் வரையிலும் 123 டெஸ்ட், 305 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில்,டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள் உட்பட 9230 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 51 சதங்களுடன் 14,255 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம், 39 அரைசதங்களுடன் 4000 க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். மேலும் அவர் தனது கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு சாதனைகளை படைத்தும் அசத்தியுள்ளார். அவற்றுள் சிலவற்றை கீழே காண்போம்.
விராட் கோலி படைத்திருக்கும் சில முக்கிய சாதனைகள்
- டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள் (இந்தியர்களில்): 7 இரட்டை சதங்கள்.
- டெஸ்ட் கேப்டனாக அதிக இரட்டை சதங்கள்: 7 இரட்டை சதங்கள்.
- இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்: 68 போட்டிகளில் 40 வெற்றிகள்.
- சொந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிகபட்ச வெற்றி சதவீதம்: 77.41%.
- சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றாவது அதிகபட்ச ரன்கள்: 553 போட்டிகளில் 27,673 ரன்கள்.
- ஒரு தசாப்தத்தில் அதிக சர்வதேச ரன்கள்: 2010-2020 வரை 20,000+ ரன்கள்
- ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்யும் போது அதிக சதங்கள்: 28 சதங்கள்.
- ஒருநாள் போட்டிகளில் சேஸிங் சராசரி: 65.5.
- ஒருநாள் போட்டிகளில் வேகமாக 14,000 ரன்கள் எடுத்தவர்.
- ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் (ஒரு பதிப்பில்): 2023ஆம் ஆண்டில் 765 ரன்கள்.
- டி20 போட்டியில் 4000 ரன்கள் எடுத்த முதல் வீரர்.
- டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்: 13,543 ரன்கள்
- ஐசிசி டி20 உலகக் கோப்பைகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் - 1292 ரன்கள்.
- டி20 போட்டிகளில் அதிக 'தொடர் நாயகன்' விருதுகள் (7 முறை).
- அனைத்து வடிவங்களிலும் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஒரே இந்தியர்
- 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற வீரர்: 2008
- 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள்: 747 ரன்கள்.
- வேகமான ஒருநாள் சதம் (இந்தியர்களில்): ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100*, 52 பந்துகள்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் - 51 சதங்கள்
- சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த இரண்டாவது வீரர் - 82 சதங்கள் (டெஸ்ட் - 30, ஒருநாள்- 51, டி20 - 1).
- ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்: 8,661 ரன்கள்
- ஐபிஎல் தொடரில் அதிக முறை 50+ ரன்கள்: 71 அரைசதங்கள்
- ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரிகளை அடித்த வீரர்: 771
- ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரிகள் (பவுண்டரி+சிக்ஸர்கள்) அடித்த வீரர்: 1000+
- ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள்: 973 ரன்கள்
- ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக அதிக போட்டிகள்: 267 போட்டிகள், (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
- ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக அனைத்து சீசன்களிலும் விளையாடிய ஒரே வீரர்
- மூன்று முறை ஐ.சி.சி. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது (2017, 2018, 2023).
- 2010 முதல் 2020 வரையிலான ஐ.சி.சி-யின் தசாப்தத்தின் சிறந்த வீரர் விருதை வென்ற இந்தியர்
- சர்வதேச கிரிக்கெட்டில் 69 ஆட்ட நாயகன் விருதுகள்.
- சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகள் (21)