சின்னசாமி மைதானத்தில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை நிறுவும் ஆர்சிபி

சின்னசாமி மைதானத்தில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களை நிறுவும் ஆர்சிபி

 சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்களை நிறுவதற்கான திட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சமர்ப்பித்துள்ளது.

ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 19 ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. மேலும் இந்த தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதனையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து ஐபிஎல் அணிகள் தீவிரமாக தயாராகி வருவதுடன், போட்டிக்கான மைதானங்களில் ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஆனால் இம்முறை நடப்பு சாம்பியன் என்ற அந்தஸுடன் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற கேள்விகள் இன்னும் நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நேரிசல் காரணமாக பலர் உயிரிழந்தனர்.

மேலும் நிறைய ரசிகர்கள் காயம் அடைந்தனர். இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அச்சம்பவத்திற்கு பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானம் போட்டிகளை நடத்த தகுதியற்றது என அறிவிக்கப்பட்டதுடன், அங்கு நடைபெற இருந்த மகாராஜா பிரீமியர் லீக், ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் ஆகியவை வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டன.

இதுபோன்ற சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் போட்டிகள் மீண்டும் பெங்களூருவில் நடத்தப்படுமா? அல்லது வேறு மைதானத்திற்கு மாற்றப்படுமா? என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) திறன் கொண்ட கேமராக்களை நிறுவுவதற்கான திட்டத்தை ஆர்சிபி சமர்ப்பித்துள்ளது.

இருப்பினும் 19 ஆவது ஐபிஎல் தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த மாற்றங்கள் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் தற்சமயம் கேஎஸ்சிஏ மைதானத்தில் சில புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பணிகள் பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்தலாமா என்பதை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறை ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.