வன்முறையில் முடிந்த மெஸ்ஸியின் நிகழ்ச்சி: ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

வன்முறையில் முடிந்த மெஸ்ஸியின் நிகழ்ச்சி: ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிறிது நேரத்திலேயே மைதானத்தை விட்டு வெளியேறியதால், ரசிகர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்த காணொளி வைரலாகி வருகிறது.

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். மேலும் அவரது இன்டர் மியாமி அணி வீரர்களான லூயிஸ் சுவாரெஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் இந்தியா வருகை தந்துள்ளனர். இன்று அதிகாலை தனி விமானம் மூலம் கொல்கத்தா வந்தடைந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் போது, மொகன் பாகன் - டைமண்ட் ஹார்பர் அணிகளுக்கு இடையிலான நட்புரீதியிலான போட்டியும் நடைபெற்றது. போட்டி முடிவுக்கு பிறகு மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் தங்களின் கனவு நாயகனை கண்ட ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் விட்ட காட்சி காண்போரை நெகிழச் செய்தது.

பின்னர் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே மைதானத்தில் இருந்த லியோனல் மெஸ்ஸி, அதன் பின் ஓய்வறைக்குச் சென்றார். அங்கு காத்திருந்த இந்திய பாலிவுட் நடிகர் ஷாருக் கான், தனது குடும்பத்தினருடன் லியோனல் மெஸ்ஸியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது குறித்த காணொளிகளும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

அதன் பின் அவர் மைதானத்திலிருந்து உடனடியாக வெளியேறி ஹோட்டலுக்குச் சென்றார். இதனால் மெஸ்ஸி மீண்டும் மைதானத்திற்குள் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன் பின், மெஸ்ஸி ஹோட்டலுக்கு சென்றதை அறிந்து கோபமடைந்த ரசிகர்கள், தாங்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்களை மைதானத்தில் வீசி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும் சிலர் தடுப்புகளைத் தாண்டி மைதானத்திற்குள் சென்றதுடன், அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்தனர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன் பின், பொருட்களைச் சேத்தப்படுத்திய ரசிகர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி, அவர்களை கலைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம் மைதானத்திலிருந்து வெளியேறிய ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மெஸ்ஸி சில நிமிடங்கள் மட்டுமே மைதானத்தில் இருந்ததாகவும், அவரைச் சுற்றிலும் ஆட்கள் நின்றிருந்ததால் எங்களால் அவரை பார்க்க முடியவில்லை என்றும், தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும், இது ஒரு மோசடி என்றும் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

இதனால் சால்ட் லேக் மைதானத்தில் பதற்றமான சூழல் நிலவியது. கொல்கத்தாவிலிருந்து இன்று ஹைதராபாத்திற்கு வருகை தரும் மெஸ்ஸி, உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.