மது அருந்துபவர்களுக்கு மூளையில் ரத்த கசிவு பாதிப்பு? எச்சரிக்கும் ஆய்வு!

மது அருந்துபவர்களுக்கு மூளையில் ரத்த கசிவு பாதிப்பு? எச்சரிக்கும் ஆய்வு!

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏற்படும் 2.6 மில்லியன் இறப்புகளுக்கு மது அருந்துதல் தான் காரணம் என்கிறது உலக சுகாதார அமைப்பு (WHO). மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் முதல் துளியிலிருந்தே தொடங்கினாலும், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் மூளையில் ரத்தக் கசிவுக்கு (Brain Bleeds) வழிவகுக்கும் என ஆய்வு எச்சரிக்கிறது. அளவிற்கு மீறி குடிப்பது என்பது, இங்கு பலரும் நினைத்து வைத்திருக்கும் அளவை விட மிகக் குறைந்த அளவு என்பதை ஆய்வு சுட்டிக்காட்டிகிறது.

மாஸ் ஜெனரல் பிரிகாம் (Mass General Brigham) நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நடத்திய புதிய ஆய்வு ஒன்று, அதிகப்படியான மது அருந்துதல் மிகவும் கடுமையான மூளை ரத்தக் கசிவை ஏற்படுத்தும் என்றும், இளம் வயதிலேயே நீண்ட கால மூளை பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறுகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூராலஜியின் மருத்துவ இதழான நியூராலஜி (Neurology)-யில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், மது அருந்துதல், குறிப்பாக அதிகப்படியான அளவு (ஆய்வின் படி ஒரு நாளைக்கு 2 பெக்) , மூளை நாளங்களை சேதப்படுத்தலாம் என்றும், இந்த விளைவு கடுமையான மூளை ரத்தக் கசிவுகளின் காரணமாக நீண்ட காலத்திற்கு இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் மூளை ரத்தக் கசிவுக்காக சிகிச்சை பெற்ற நோயாளிகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது இந்த ஆய்வு. மாஸ் ஜெனரல் பிரிகாம் நரம்பியல் துறையின் மருத்துவ ஆய்வாளரும், இந்த ஆய்வின் ஆசிரியருமான டாக்டர். எடிப் குரால் கூறுகையில், "மூளை ரத்தக் கசிவு என்பது மனிதர்களுக்குத் தெரிந்த மிகவும் அபாயகரமான மற்றும் முடக்கும் நிலைகளில் ஒன்றாகும். இது திடீரென ஏற்படும், கடுமையான சேதத்தை உண்டாக்கும் மற்றும் பெரும்பாலும் நோயாளிகளை வாழ்க்கை மாற்றும் குறைபாடுகளுடன் விட்டுச்செல்லும்" என்கிறார்.

மூளையில் ரத்தக் கசிவு என்றால் என்ன?

மூளையில் ரத்தக் கசிவு (Intracerebral Haemorrhage) அல்லது ரத்தக்கசிவு பக்கவாதம் (Haemorrhagic Stroke) என்பது மூளையின் உள்ளே உள்ள ஒரு ரத்த நாளம் வெடிக்கும்போது ஏற்படுகிறது என்கிறது NIH. இந்த நிலையில் உள்ளவர்களில் சுமார் 50% பேர் இறக்கின்றனர் என்றும், 30% பேர் கடுமையான குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மூளை ரத்தக் கசிவு ஏற்பட்டவர்களில் 20% பேர் மட்டுமே தங்கள் தேவைகளைத் தாங்களே கவனித்துக் கொள்ளும் நிலையில் உள்ளனர் என்கிறார் டாக்டர். குரால். அதிகப்படியான மது அருந்துதல் மூளை ரத்தக் கசிவுகளில் ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள் 2003 மற்றும் 2019க்கு இடையில் மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,600 நோயாளிகளின் தரவுகளைப் பயன்படுத்தினர்.

விபத்து அல்லது காயம் காரணமாக ரத்தக் கசிவு ஏற்படாத நோயாளிகளும் இதில் அடங்குவர். சி.டி ஸ்கேன்கள் மூலம் ரத்தக் கசிவின் அளவு மற்றும் இருப்பிடத்தை மதிப்பிட்டனர். எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் மூளையின் சிறிய ரத்த நாளங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அறிகுறிகளை உறுதிப்படுத்தின.

ஆய்வில் தெரியவந்தது என்ன?

  • மூளை ரத்தக் கசிவு நோயாளிகளில் சுமார் 7% பேர் ஒரு நாளைக்கு மூன்று பெக்கிற்கு மேல் அருந்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • அதிகமாக மது அருந்தியவர்களுக்கு மூளை ரத்தக் கசிவு ஏற்பட்டபோது அவர்கள் இளம் வயதினராக இருந்தனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு 70 சதவீதம் பாதிப்பும் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு பெக் குடிக்கும் இளம் வயதினர்களுக்கு மூளை பாதிப்பு ஏற்படும் அதிகம் என்கிறது ஆய்வு.
  • மேலும், அதிகமாக மது அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு வந்தபோது குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையையும் (ரத்தம் உறைய உதவும் செல் துண்டுகள்) அதிக ரத்த அழுத்தத்தையும் கொண்டிருந்தனர். இந்த நோயாளிகளுக்கு மூளையில் உள்ள சிறிய ரத்த நாளங்களில் சேதம் ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது, இது டிமென்ஷியா, நினைவாற்றல் இழப்பு மற்றும் நடைப் பிரச்சனைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது. மேலும் இது மூளை ரத்தக் கசிவுக்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும்.

மூளை ரத்தக் கசிவைத் தடுப்பது எப்படி?

அதிகப்படியான மது அருந்துதல் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது மூளையில் உள்ள சிறிய ரத்த நாளங்களைச் சேதப்படுத்தி, அவற்றை பலவீனமாக்குகிறது. இதனால் அவை கசியவோ அல்லது வெடிக்கவோ அதிக வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது, ரத்தப்போக்கை நிறுத்த உடலுக்கு கடினமாகிறது. இந்த காரணிகள் அனைத்தும் மூளை ரத்தக் கசிவு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும். "மதுப் பயன்பாட்டைக் குறைப்பது அல்லது நிறுத்துவது அந்த அபாயத்தைக் குறைக்க ஒரு முக்கியமான படியாகும்" என வலியுறுத்துகிறார் மருத்துவர் குரால்.