நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவு

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவு

அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அனைத்தும் அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனுக்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக, விருப்ப மனுக்கள் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. விருப்பமுள்ளவர்களும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை வழங்கினர். அந்த வகையில், அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தமாக 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது.

தொடர்ந்து விருப்ப மனு அளிப்பவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் காலை 9.30 - பிற்பகல் 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, மதுரை, தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் விருப்பமான அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

அந்த வகையில், இன்றைய தினம் (ஜன.24) ஐந்தாம் கட்டமாக விடுபட்ட மாவட்டங்களை சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமான அளித்தவர்களுக்கான நேர்காணல் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான நேர்காணலும்; மாலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான நேர்காணலும் நடைபெறுகிறது.

அதிமுக ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள், விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன், வந்தால் மட்டுமே நேர்காணலில் கலந்து கொள்ள முடியும் என்று ஏற்கனவே தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுமார் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு இந்த தேர்தலில் ஏன் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்? ஒருவேளை வழங்கப்பட்டால் வெற்றி பெறுவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளது? நேர்காணலில் கலந்து கொண்டவர்களின் கட்சி சார்ந்த பணிகள் என்ன? என்பது தொடர்பான கேள்விகள் இந்த நேர்காணலில் கேட்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, அதிமுக அமைப்பு ரீதியாக செயல்படும் அனைத்து மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான நேர்காணல் இன்றுடன் நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.