''ஆல் இந்தியா டூர் போகணுமா? மதுரைக்கு வாங்க'' - அழைப்பு விடுத்த உதயநிதி ஸ்டாலின்!
மதுரை தமுக்கம் மைதானத்திற்கு அடுத்த 12 நாட்கள் வந்தால் கிட்டத்தட்ட ''ஒரு ஆல் இந்தியா சுற்றுலா'' சென்ற உணர்வு நிச்சயமாக கிடைக்கும் என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவு திருவிழாவினை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
மதி கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்து 500 சகோதரிகளுக்கு மகளிர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற வருடம் மிகப்பெரிய வரவேற்பை சென்னை மக்களிடையே பெற்றது. இந்த வருடம் மதுரையில் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிறைய பேர் All India Tour போக வேண்டும் என்று விரும்புவார்கள். தமுக்கம் மைதானத்திற்கு அடுத்த 12 நாட்கள் வந்தால் போதும் கிட்டத்தட்ட ஒரு All India Tour சென்ற உணர்வு வந்தவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பிரபலமான பொருட்களை இங்கே சுயஉதவிக் குழு பெண்கள் விற்பனைக்கு வைத்துள்ளார்கள். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, கோயம்புத்தூர் ஐம்பொன் நகைகள், கள்ளக்குறிச்சி மரச்சிற்பங்கள், ஈரோடு நூல் வளையல்கள் என்று மிகப் பெரிய பட்டியலை கொடுத்துள்ளார்கள். அதே மாதிரி உணவுத் திருவிழாவை எடுத்துக் கொண்டால் சென்ற ஆண்டு மிகப்பெரிய வரவேற்பை சென்னை மக்கள் கொடுத்தார்கள். இந்த ஆண்டு மதுரையில் இருக்கக்கூடிய மக்கள் மதுரை தமுக்கம் மைதானத்திற்கு வந்து, பல்வேறு உணவுகளை ருசித்து மிகப்பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
சென்னையில் சென்ற ஆண்டு 5 நாட்கள் நடந்த உணவு திருவிழாவில் விற்பனை 1 கோடியே 55 லட்சத்தை தாண்டியது. இன்றைக்கு மதுரையில் 12 நாட்கள் நடக்கக்கூடிய உணவுத் திருவிழாவில் விற்பனை சென்ற வருடத்தைவிட அதிகமாக இருக்கும் என்று நம்புகிறோம். உணவுத் திருவிழாவில் தயார் செய்திருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் அத்தனையும், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுடைய சொந்த தயாரிப்பு, அவர்களுடைய உழைப்பு.
இந்த கண்காட்சியில் நீங்கள் வாங்குகின்ற ஒவ்வொரு பொருளும், மகளிர் சுய உதவிக்குழுவின் சகோதரிகளுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய அன்பும், ஊக்கமும் ஆகும். அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த ஆண்டு இதுவரை மட்டும் 620 கோடி ரூபாய்க்கு மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனையாகி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. சென்ற ஆட்சியில் 10 ஆண்டுகளில் அரசின் இதே துறையின் விற்பனை அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு 10 கோடி ரூபாயை தாண்டவில்லை. கடந்த இரண்டரை வருடங்களாக 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இன்று 500 குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலமாக நீங்கள் தயாரிக்கக்கூடிய உங்களுடைய தயாரிப்பு பொருட்களை அரசுப் பேருந்துகளில் 25 கிலோ வரை 100 கிமீ தூரத்திற்கு கட்டணம் இல்லாமல் எடுத்து செல்ல முடியும். பெண்கள் அடுத்தவர்களிடம் வேலை கேட்டு நிற்கின்ற நிலைமை மாறி, இன்றைக்கு அடுத்தவர்களுக்கு வேலை தருகின்ற நிலைமைக்கு நீங்கள் அத்தனை பேரும் வந்திருக்கிறீர்கள். மகளிர் முன்னேற்றம் தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டினுடைய, இந்தியாவினுடைய முன்னேற்றம்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.