நடிகர்களுக்கு மட்டும்தான் கூட்டம் கூடுமா எனக் கேட்டு விஜயை சீண்டிய சீமான், தற்குறிகள்தான் கூடுவார்களா, தத்துவக்காரர்களும் கூடுவார்கள் என பேசியிருக்கிறார்.
விடுதலை புலிகளின் தலைவர் மறைந்த பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாம் தமிழர் கட்சி, தமிழர் எழுச்சி நாள் விழாவை நடத்தியது. இதில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை மறைமுகமாக சாடினார். அண்மையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திய தவெக தலைவர் விஜய், எல்லோருக்கும் நிரந்தர வீடு. வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம். கார் என்பது லட்சியம்... என்று பேசியிருந்தார்.
இதனையும் குறிப்பிட்டு சீமான் கடுமையாக சாடினார். சோறு இல்லாத மக்களுக்கு, எதற்கு கார் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி மாநாடு நடத்தவுள்ளதாகக் கூறிய சீமான், நடிகர்களுக்கு மட்டும்தான் கூட்டம் கூடுமா எனக் கேட்டு விஜயை மறைமுகமாக சீண்டினார்.
8.5 விழுக்காடு வாக்கு வைத்திருப்பதாக குறிப்பிட்ட சீமான், தான் இன்னும் உந்தி தள்ளினால் அது 20 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துவிடும் என சூளுரைத்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் சீமான், மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.