தேமுதிக கேட்பனின் கட்சி... யாரும் மிரட்ட முடியாது - நிருபரின் கேள்வியால் சீறிய பிரேமலதா விஜயகாந்த்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர மிரட்டல் விடுக்கப்படுகிறதா என்ற நிருபரின் கேள்வியால் டென்ஷனான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "இது கேப்டனின் கட்சி என்றும், யாரும் எங்களை எதுவும் செய்யவோ மிரட்டவோ முடியாது எனவும் கூறினார்.
பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று தூத்துக்குடியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதற்காக, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் கூட்டணி குறித்து கேள்வியெழுப்பிய போது, “கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 3ஆம் தேதி வரைக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். எனவே கூட்டணி குறித்து கூறுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அதனால் உரிய நேரத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன்.
தேமுதிகவிற்கு எந்த கூட்டணி நல்லதோ, மாவட்ட செயலாளர்களும், கழக நிர்வாகிகளும் யாரை அதிகம் விரும்புகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும். ஒரு தாயாக கழகத்தை கட்டி காக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்றார். பிரதமரின் தமிழக வருகை குறித்து கேட்டதற்கு, “அவருடைய கூட்டணிக் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தார். அதுகுறித்து நான் ஒன்றும் சொல்லமுடியாது” என்று கூறினார்.
எடப்பாடி- டிடிவி தினகரன் ஒன்று சேர்ந்திருப்பது குறித்து கேட்டபோது, “அதற்கு நான் பதில் கூற முடியாது. அவர்கள் இருவரும் சேர்ந்துதான் சொல்ல முடியும். அதுதான் சரியாக இருக்கும்” என்று பதிலளித்தார்.
விஜய் படத்திற்கு தொடர்ந்து பாஜகதான் இடையூறுகள் கொடுத்து வருகிறதா? என்ற செகேள்விக்கு, “சட்டம் தன் கடமையை செய்யும். அரசியலுக்காக செய்கிறார்களா அல்லது படத்தில் ஏதேனும் இருக்கிறதா? என்று விஜய்தான் சொல்ல வேண்டும். விஜய்யை கூப்பிட்டு பிரஸ் மீட் நடத்த வேண்டும். அதை பார்க்கவே ஆவலோடு இருக்கிறேன்” என்றார்.
திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்ற மக்களின் கருத்து குறித்து கேட்டதற்கு, “ பல முறை திமுகவிற்கு எத்தனை மதிப்பெண் என நான் கூறியிருக்கிறேன். 50% நல்லதும் நடந்து இருக்கிறது. நடக்க வேண்டியதும் இருக்கிறது. எல்லா காலத்திலும் போராட்டம் இருக்கத்தான் செய்கிறது. இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், செவிலியர்கள் என அனைவரின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்” என்றார்