''நடிகர்களின் சம்பளத்தை மறுசீரமைக்க நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை'' - தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி!

''நடிகர்களின் சம்பளத்தை மறுசீரமைக்க நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை'' - தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி!

நடிகர்களின் சம்பளத்தை மறுசீரமைப்பு செய்ய நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி கூறியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமையில் சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், தேவயானி, எஸ்.ஏ.சந்திரசேகர், மன்சூர் அலிகான், எஸ்.வி.சேகர், ராதாரவி உள்ளிட்ட உறுப்பினர்கள் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பொதுக்குழுவில் மூத்த தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணிக்கு கலைமாமணி விருது வழங்கியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் 2 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கலைமாமணி வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்திக் கொள்ள ஒரே இடத்தில் அனுமதி என்ற ஒற்றை சாளர முறை என்ற அரசாணை பிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி பொதுக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதே போல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உள்ளூர் சேவை வரியை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று 4 சதவீதமாக குறைத்து அரசாணை பிறப்பித்ததற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால், சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் பையனூரில் 100 ஏக்கர் நிலம் வழங்கிய அரசாணையை புதுப்பிக்க வேண்டிய கோரிக்கைகளை பரிசீலனை செய்து அரசாணை வெளியிட்டதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அழைக்கப்படும் மறைந்த நடிகர் ஜெய்சங்கர் வாழ்ந்த தெருவிற்கு 'ஜெய்சங்கர் சாலை' என பெயர் சூட்டியதற்கு, நடிகர் விவேக் வசித்த தெருவிற்கு 'சின்ன கலைவாணர் விவேக் தெரு' என்று பெயர் சூட்டியதற்கும், நாடக கலைஞர் எஸ்.வி. சேகர் தந்தை எஸ்.வி. வெங்கட்ராமன் வசித்த தெருவிற்கு 'எஸ்.வி. வெங்கட்ராமன் தெரு' என்று பெயர் சூட்டியதற்காகவும், இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் பெயரில் 'இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் போக்குவரத்து தீவு' என்று பெயர் சூட்டியதற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழு தீர்மானங்கள்

ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் சூழ்நிலையில் மற்ற மாநிலங்களை போல் நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் வருமான பங்கில் படம் நடிக்க வேண்டும். தயாரிப்பாளர்களுடைய லாப நஷ்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்.

தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் வெப் சீரிஸ்களை தவிர்த்து திரைப்படங்கள் மீது கவனங்கள் செலுத்த வேண்டும். அப்படி செயல்படாத கலைஞர்களுக்கு சம்பந்தப்பட்ட சங்கங்கள் பணி ஒத்துழைப்பு வழங்கக்கூடாது. அவர்களின் திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடக்கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.

தனியார் அமைப்புகள் விருது வழங்கும் நிகழ்ச்சி அல்லது இசை நிகழ்ச்சி நடத்தினால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அனுமதி வாங்கி நடத்த வேண்டும். அவ்வாறு அனுமதி கடிதம் பெறாமல் நடத்தினால் தனியார் அமைப்புகள் மீது சட்ட ரீதியாகவும் திரைத்துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் வரம்பு மீறி செயல்படும் youtube சேனல்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் என்ற இணையதள முன்பதிவு முறையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

தமிழ் திரைப்படங்களில் பட தலைப்பு சம்பந்தமாக பிரச்சனைகள் இருந்து வருவதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மூலம் மட்டுமே பதிவு செய்வது என்று முடிவு செய்து மாநில அரசுகளுடன் பேசி சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு சரியான திரையரங்குகள் கிடைப்பதில்லை. இதை சரி செய்யும் வகையில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் அடங்கிய திரைப்பட வெளியீட்டு ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும்.

2026-29 ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் மாதம் நடத்த வேண்டும்.

தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பொதுக்குழுவில் பேசுகையில், ''பொதுக்குழு கூட்டத்தில் ஆக்கப்பூர்வமாக பேசவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்த ரூ.8.5 கோடி வைப்பு தொகை தற்போது இல்லை. அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகம் கெட்டுப் போனதற்கு அரசியல் உள்ளே வந்தது தான் காரணம்.'' என்று குற்றம்சாட்டினார்.

இதன் பிறகு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''ஓடிடி அடிப்படையிலான வணிகம் குறைந்து வருகிறது. திரையரங்குக்கு ஏற்ற பட்ஜெட்டில் படங்களை தயாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஓடிடி நம்பி படம் எடுக்காதீர்கள்.

நடிகர்களின் சம்பளத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. முன்தொகையாக சம்பளத்தில் 10 சதவிகிதம் மட்டுமே தரப்படும். எந்த நடிகராக இருந்தாலும் வியாபார பங்கீட்டு அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் முறையை இங்கும் பின்பற்ற வேண்டும். பெரிய நடிகர்கள் ஓடிடியில் நடிப்பதால் மக்கள் திரையரங்குக்கு வருவது குறைந்துவிட்டது. ஓடிடியில் கவனம் செலுத்தும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை.

பட வெளியீடுகளை முறைப்படுத்த குழு அமைக்கப்படும். விஷால் தலைவராக இருந்தபோது வைப்புத்தொகையாக இருந்த ரூ.8 கோடி பணம் சங்க விதிகளை மீறி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடோ, கையாடலோ நடக்கவில்லை. அதற்கான கணக்கு வழக்கு உள்ள நிலையில் விசாரணை நடத்தி மீட்க நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான குழு நடவடிக்கை எடுக்கும்.

ஓடிடியில் அசுர வளர்ச்சி திரைத்துறையை பாதிக்கிறது. முன்பு போல் அதிக விலைக்கு ஓடிடி படங்களை வாங்குவதில்லை. பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்க இன்றைக்கு தயாரிப்பாளர்கள் இல்லாத நிலையே உள்ளது.

திரையரங்குகளில் பாப்கார்ன் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளின் விலை நிர்ணயத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துடன் பேசி வருகிறோம்.

விமர்சனம் செய்வதற்கு ஒரு வரைமுறை உள்ளது. எல்லா ஊடகங்களையும் நாங்கள் குறை சொல்லவில்லை. எதிர்மறையான விமர்சனங்கள் கொடுப்பது தற்போது ஃபேஷனாகிவிட்டது. நெகட்டிவாக விமர்சனம் கொடுத்தால் விரைவில் ரீச் ஆவோம் என்று நினைத்து விமர்சனம் இப்படி கொடுக்கிறார்கள். இது குறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்போம்.

படத்தின் ப்ரமோஷன் என்பதற்காக அநாகரிகமான கேள்விகளை தயாரிப்பாளர் கேட்கச் சொல்வதாக கூறுவது ஏற்கத்தக்கது இல்லை. திசை திருப்புவதற்கு இதுபோன்ற விஷயங்களை செய்கிறார்கள். ஒருவேளை இதுபோல் நடப்பதாக தெரிய வந்தால் மக்கள் தொடர்பாளர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்குவோம்.'' என்று தெரிவித்தார்.