எஸ்ஏ20: டெவால்ட் பிரெவிஸ் சதம் வீண்; மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சன்ரைசர்ஸ்

எஸ்ஏ20: டெவால்ட் பிரெவிஸ் சதம் வீண்; மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சன்ரைசர்ஸ்

பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்த நான்காவது எஸ்.ஏ.20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்கமே ஏமாற்றம் அளிக்கும் வகையில் கானர் எஸ்டர்ஹுய்சன் ரன்கள் ஏதுமின்றியும், ஷாய் ஹோப் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த பிரைஸ் பார்சென்ஸ் - டெவால்ட் பிரெவிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர்.

ஒரு கட்டத்தில் பார்சென்ஸும் பார்சென்ஸ் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ் 3 ரன்களிலும், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் 17 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரெவிஸ், எஸ்.ஏ.20 தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ பிரீட்ஸ்கே - கேப்டன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களை பதிவு செய்ததுடன், நான்காவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியையும் உறுதி செய்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரிட்ஸ்கே 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 68 ரன்களை சேர்த்தார்.

மறுபக்கம் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 63 ரன்களையும் சேர்த்திருந்தனர். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி எஸ்.ஏ.20 தொடரில் தங்களின் மூன்றாவது சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் அந்த அணி 2023, 2024ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டியில் சதம் விளாசிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் டெவால்ட் பிரெவிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதேசமயம் தொடர் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் அணியின் குயின்டன் டி காக் தொடர் நாயகன் விருதை வென்றார்.