உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 54.1 புள்ளியுடன் பட்டியலில் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 124 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்த நிலையில், இந்திய அணியால் அதனை எட்டமுடியாமல் 93 ரன்களில் ஆல் அவுட்டாகி, 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது.

அதேசமயம் தென்னாப்பிரிக்க அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி சாதனை வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதால் போட்டி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொல்கத்தா டெஸ்டில் ஏற்பட்ட படு தோல்வி காரணமாக இந்திய அணியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவும் கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் 2025-27 சீசனில் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி விளையாடிய 8 போட்டிகளில் ஏற்கெனவே மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம் ஒரு போட்டி டிராவிலும், 4 போட்டிகளில் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

இதனால் தற்சமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா 54.1 புள்ளியுடன் பட்டியலில் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி வரும் தொடர்களில் இந்திய அணி கவனத்துடன் விளையாட வேண்டிய சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுவாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற அணிகள் 64 முதல் 68 புள்ளிகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.

அந்தவகையில், இந்திய அணிக்கு மேற்கொண்டு 10 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், அதில் குறைந்தது 7 அல்லது 8 வெற்றிகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுளது. இதனால் இம்முறை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா அல்லது லீக் சுற்றுடன் வெளியேறுமா என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.

2025-27 WTC சுழற்சியில் இந்தியாவின் மீதமுள்ள போட்டிகள்:

  • தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சொந்தத் தொடர் - 1 டெஸ்ட் (கௌகாத்தி)
  • இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு தொடர் - 2 டெஸ்ட் போட்டிகள்
  • நியூசிலாந்துக்கு எதிரான வெளிநாட்டு தொடர் - 2 டெஸ்ட் போட்டிகள்
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்தத் தொடர் - 5 டெஸ்ட் போட்டிகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரலாறு

கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது மூன்று சீசன்களை கடந்துள்ள நிலையில், அதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அதேசமயம் இந்திய அணி இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையிலும், கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறைவிட்டது குறிப்பிடத்தக்கது.