‘சீட்டை வாங்கிக் கொண்டு தான் விருதுநகருக்கு வருவேன்!’ - ராஜேந்திர பாலாஜியை மிரட்டும் பாண்டியராஜன் சபதம்

‘சீட்டை வாங்கிக் கொண்டு தான் விருதுநகருக்கு வருவேன்!’ - ராஜேந்திர பாலாஜியை மிரட்டும் பாண்டியராஜன் சபதம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரிசையாக முட்டுக்கட்டைகளை எடுத்து வீசினாலும், ‘‘அதையெல்லாம் தகர்த்து விருதுநகர் சீட்டை வாங்கிக் கொண்டு தான் ஊருக்கு வருவேன்” என சபதமாகவே சொல்லிக் கொண்டிருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

மாஃபா பாண்டியராஜன் 2011 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகரில் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், அதிமுகவில் இணைந்தார். அதன் பிறகு, 2016-ல் ஆவடி தொகுதியில் வென்று அமைச்சரும் ஆனார். அப்போது மதுரை திருமங்கலம் தொகுதியில் வெற்றிபெற்ற ஆர்.பி.உதயகுமாரும் சிவகாசியில் வெற்றிபெற்ற கே.டி.ராஜேந்திரபாலாஜியும் அமைச்சரானார்கள். இருந்தபோதும் உதயகுமாரும் பாண்டியராஜனும் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே போய்விட்டதால் விருதுநகரில் தனிக்காட்டு ராஜாவாகிப் போனார் ராஜேந்திர பாலாஜி.

இந்நிலையில், கடந்த மக்களவை தேர்தல் சமயத்தில் பாண்டியராஜன் விருதுநகரில் வீடுகட்டி குடியேறினார். அந்தத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடவும் அவர் ஆயத்தமாக இருந்தார். ஆனால், இவரது மீள்வருகையை ரசிக்காத ராஜேந்திர பாலாஜி, தந்திரமாக விருதுநகர் தொகுதியை தேமுதிகவுக்கு தள்ளிவிட்டதாகச் சொல்வார்கள். அப்போது முதலே பாண்டியராஜனுக்கும் பாலாஜிக்கும் பனிப்போர் தொடர ஆரம்பித்து விட்டது.

பாலாஜியின் நடவடிக்்கைகளால் விருதுநகர் அரசியலில் அதிகம் தலைக்காட்டாமல் ஒதுங்கிய பாண்டியராஜன், மும்பைப் பக்கம் தனது பிசினஸ் தொடர்பான வேலைகளில் பிசியாகிப் போனார். தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதை தவிர்க்கலாமே என பழனிசாமியின் விருதுநகர் பிரச்சாரப் பயணத்தின் போதுகூட விருதுநகர் மாவட்டத்துப் பக்கம் வரவில்லை பாண்டியராஜன்.

இந்த நிலையில், தற்போது சென்னைக்கும் மும்பைக்குமாக பறந்து கொண்டிருக்கும் மாஃபா பாண்டியராஜன், “விருதுநகர் மாவட்டத்தில் சும்மா வெத்துவெட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை. உரிமையுடன் வந்து உருப்படியாய் அரசியல் செய்யலாம் என நினைக்கிறேன்.

இம்முறை விருதுநகர் தொகுதியில் போட்டியிட தலைமையிடம் சீட்டை உறுதிப்படுத்திக் கொண்டு தான் ஊருக்குத் திரும்புவேன்” என்று கிட்டத்தட்ட தனது விசுவாச வட்டத்தில் சபதமே செய்திருக்கிறாராம். இதனால், மறுபடியும் தங்களுக்கு வாழ்வு கிடைத்துவிட்டது போல் மாஃபா ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.