விஜய் சென்னை வந்து ஒருநாள் ஆகல.. அடுத்த சம்மன் அனுப்பிய சிபிஐ.. ஜனவரி 19ல் மீண்டும் விசாரணை!
கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஜனவரி 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜய் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகுவார் என்று தவெக தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 19ஆம் தேதி மீண்டும் சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு விஜய் பதில் அளிக்கவுள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தின் போது தவெக தலைவர் விஜய் உடனடியாக சென்னை திரும்பினார். அதன்பின் 3 நாட்கள் கழித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு சவால்விட்டு வீடியோவையும் வெளியிட்டார்.
கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தவெக கோரிக்கைவை ஏற்று, உச்சநீதிமன்றம் விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்காணிப்பில் சிபிஐ வசம் ஒப்படைத்தது. சிபிஐ அதிகாரிகள் கரூர் மாவட்டத்தில் இருந்து விசாரணையை மேற்கொண்ட நிலையில், தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோரை டெல்லியில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. 20 மணி நேரத்திற்கு மேலாக தவெக நிர்வாகிகள் தனியாக அமர வைக்கப்பட்டனர். இறுதியாக 5 மணி நேரம் மட்டுமே அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்ட சூழலில், கரூர் வழக்கில் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுவது தவெக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
நேற்று காலை 11.30 மணியளவில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான விஜய்யிடம் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின் நேற்றிரவு டெல்லியிலேயே முகாமிட்ட விஜய், 2வது நாளாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொங்கல் கொண்டாட்டம், ஜனநாயகன் ரிலீஸ் விவகாரம், பிரச்சார பயணத் திட்டம் உள்ளிட்ட பணிகள் உள்ளது என்று கூறி, விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது சிபிஐ அதிகாரிகள் தரப்பில், இன்னொரு நாள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுவேன் என்று உறுதி கொடுத்தால் விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனை ஏற்றுக்கொண்ட விஜய் தரப்பு, பொங்கல் பண்டிகைக்கு பின் ஒருநாள் ஆஜராகுவேன் என்று கூறியுள்ளனர்.
இதன்பின் விஜய் இன்று மதியம் 12.30 மணியளவில் சென்னை திரும்பினார். இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ஜனவரி 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சம்மன் அனுப்பி இருக்கின்றனர். சென்னைக்கு திரும்பி 24 மணி நேரம் கூட ஆகாத சூழலில், சிபிஐ அடுத்த சம்மன் அனுப்பி இருப்பது தவெகவினரை மேலும் சோகமாக்கி இருக்கிறது.