ஆளுநரின் திமிரை அடக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
‘தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க. ஆட்சியை புகழ்ந்து பேசியிருக்கின்ற ஆளுநர், அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்கவேண்டும்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2025) ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரையில், “ நாம் தினந்தோறும் தொடர் திட்டங்களைத் செயல்படுத்துவதால்தான், எதிர்க்கட்சிகள் என்ன சொல்வது என்று தெரியாமல், விரக்தியில் பிரம்மைப் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நான் பேசும் போது, "சின்னியம்பாளையத்தில் பிறந்து, நாட்டு விடுதலைக்காக பாடுபட்டதோடு, தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட - ‘பால்வளத் தந்தை’ சி.கு.பரமசிவம் அவர்களின் திருவுருவச் சிலை ஈரோடு பால்பண்ணையில் நிறுவப்படும்" என்று அறிவித்தேன்.
விவசாயக் குடும்பங்களின் வருவாயை உயர்த்த, பால் விநியோக முறையை நவீனப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் அவர். தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், கூட்டுறவு பால் சங்கங்கள், பால் செயலாக்கக் கட்டமைப்புகள் அனைத்துமே அவர் விதைத்த விதையின் விளைச்சல். அத்தகைய பெரும் ஆளுமைக்கு நன்றி செலுத்த சொன்னபடியே, சித்தோடு பால்பண்ணை வளாகத்தில் அவருடைய திருவுருவச் சிலையை நிறுவி இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை நிரந்தரமாக கெடுக்க வேண்டும் என்றே ஒருவரை பாஜக ஆளுநரை நியமித்திருக்கிறார்கள்.
அவர் சமீபத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சேவையாற்ற அவர் வந்திருப்பதாக சொன்னதை கேட்டதுமே, சிரிப்புதான் வந்தது. தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறதாம். தீவிரவாதப் போக்கு நிலவும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதாம். தமிழ்மொழி வளர்ச்சிக்காக இங்கே எதுவும் நடக்கவில்லையாம். எல்லோரும் ஆங்கிலம் படிக்கிறார்களாம். இப்படியெல்லாம் அவதூறு, ஆற்றாமை கலந்து புலம்பியிருக்கிறார் ஆளுநர்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில்தான் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்து, சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் பலியானார்கள்? ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் தான் டெல்லி செங்கோட்டை அருகில் குண்டுவெடிப்பு நடந்து அங்கே மக்கள் பல பேர் பலியானார்கள்? பா.ஜ.க. ஆட்சியில்தான் மணிப்பூர் பற்றி இன்றைக்கு எரிந்து கொண்டிருக்கிறது?
தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க. ஆட்சியை புகழ்ந்து பேசியிருக்கின்ற ஆளுநர், அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்கவேண்டும்.
இக்கட்டான சூழல்களில் எல்லாம், தன்னுடைய தேசப்பற்றைக் காட்டி, நம்முடைய படை வீரர்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்குவது நம்முடைய தமிழ்நாடுதான்! அப்படிப்பட்ட தமிழர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கின்ற ஆளுநரின் பேச்சு என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பதுபோல பேசுகிறார். அவர் வகிக்கின்ற அரசியல் சாசனப் பொறுப்புக்குத் துளியும் பொருத்தமற்ற, தகுதியற்ற தரக்குறைவான பேச்சு இது.
எங்கள் பிள்ளைகள் உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். அதில், உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு எங்கே எரிகிறது? இன்னும் டபுள் மடங்கு ஆர்வமாக நாங்கள் ஆங்கிலம் படிக்க தயாராக இருக்கிறோம்!
இந்தியா முழுவதும் இந்தி பேசாத மாநில மொழிகள் இன்றைக்கு உயிர்ப்யுடன் இருக்கும் என்றால், அதற்கு காரணமே தமிழ்நாடு உயிரைக் கொடுத்து மொழிப்போரில் ஈடுபட்டதுதான்! தாய்மொழிப் பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு நீங்கள் வகுப்பெடுக்க வேண்டாம்! அந்த பாடத்தில் பி.எச்.டி. வாங்கியவர்கள் நாங்கள்!’ எனத் தெரிவித்தார்.