நன்றாக பேசினால் முதல்வராகி விட முடியுமா? கிச்சா சுதீப் பேச்சு
நன்றாக பேசுபவர்களெல்லாம் முதல்வராக முடியாது. இது போன்ற எண்ணம் இருந்தால் வீட்டுக்கு செல்ல வேண்டியது தான் என கிச்சா சுதீப் கூறினார்.
கிச்சா சுதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘மார்க்’ (Mark). ஆக்ஷன் - டிராமா கதைக் களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படமானது வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரைப்படத்தின் கதாநாயகன் கிச்சா சுதீப், இயக்குநர் விஜய் கார்த்திகேயா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், சுரேஷ் காமாட்சி, தனஞ்செயன், நடிகர்கள் யோகி பாபு, குரு சோமசுந்தரம், நடிகை தீப்ஷிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கிச்சா சுதீப்பிடம் அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. முதலில் அவரிடம் திரைப்படத்தில் நடிகைகளை தொடாமல் நடிக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இந்த திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகள் இல்லை. கதைக்கு அது தேவைப்படவும் இல்லை” என சட்டென பதிலளித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் நடிகைகள் ஓரமாக அமர்ந்திருந்ததை சுட்டிக் காட்டி, இதேபோல தான் படத்திலும் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார்களா? என ஒரு யூ டியூபர் கேள்வி எழுப்பினார். உடனே, “இந்த கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன்” என்று கூறிய கிச்சா சுதீப், அந்த நடிகைகள் இருவரையும் நடுவில் அமர வைத்து விட்டு, அவர் ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டார். மேலும் இது போன்ற அசௌகர்யமாக கேள்விகளை எழுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்ததோடு, “இந்த திரைப்படத்தில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் சண்டைக் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்தார்.
அவரிடம், எம்ஜிஆர் போல் பேசுகிறீர்கள், விஜய் மாதிரி முதல்வராக ஆசை உள்ளதா? என்று கேட்டதற்கு, “அழகாக பேசுபவர்களெல்லாம் முதல்வராக முடியாது. இது போன்ற எண்ணம் இருந்தால் வீட்டுக்கு செல்ல வேண்டியது தான்” என்றார்.
கிச்சா சுதீப்பைத் தொடர்ந்து யோகி பாபுவிடம், பல மொழிகளில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது? என்றும், படத்தின் அறிமுக விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “நான் திரைப்படத்தில் நடிக்க வந்து 22 வருடங்கள் ஆகிவிட்டன. தொடர்ச்சியாக பல மொழிப்படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரைப்பட அறிமுக விழாக்களில் கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அது ஏற்புடையதல்ல. ஏனென்றால் ஒரு சில படங்களில் நான் 4 சீன்கள் மட்டுமே நடித்திருந்தாலும் என்னுடைய புகைப்படத்தை பேனரில் வைத்து ரசிகர்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். அதை என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று டென்ஷனாக பதிலளித்தார்.
நடிகர் குரு சோமசுந்தரத்திடம், உங்களுடைய கதாபாத்திரம் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, “படத்தில் எனக்கு ஸ்டைலிஷான உடைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குமேல் என்னால் சொல்ல முடியாது. படத்தின் சுவாரசியம் குறைந்துவிடும்” என்றார்.