திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த 5 பேர் குழுவை அமைத்தது காங்கிரஸ்

திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த 5 பேர் குழுவை அமைத்தது காங்கிரஸ்
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்காக மேலிட பொறுப்பாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு காங்கிரஸ் தலைவர் அமைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில், செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர், விரைவில் திமுக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "இந்தியா கூட்டணி"-யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசல் புரசலாக அவ்வப்போது வெளியாகும் தகவல்களுக்கு, இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புவதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.