பள்ளியில் மயங்கி விழுந்த சிறுமி உயிரிழப்பு: மானாமதுரையில் துயர சம்பவம்
மானாமதுரையில் பள்ளிக்குச் சென்ற 5 வயது சிறுமி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி பவானி. இந்த தம்பதிக்கு தேஜாஸ்ரீ (5) என்ற பெண் குழந்தை இருந்தார். இவர் மானாமதுரை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் யூகேஜி (UKG) வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று (டிச.20) காலை வழக்கம் போல் தேஜாஸ்ரீயை அவரது பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென சிறுமி தேஜாஸ்ரீ நிலை தடுமாறி தரையில் மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில், சிறுமி தேஜாஸ்ரீ உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மானாமதுரை காவல் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சிறுமிக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு இருந்ததா? அல்லது உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து மானாமதுரை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய, சிறுமியின் உடல் உடற்கூறாய்வுக்காக (பிரேதப் பரிசோதனை) சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுமி தேஜாஸ்ரீ உயிரிழப்பு தொடர்பாக மானாமதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 5 வயது சிறுமி திடீரெனப் பள்ளியில் உயிரிழந்த சம்பவம், சக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மானாமதுரை பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.