புயல் எதிரொலியாக 10 நாட்களுக்கு இதுதான் நிலைமை! துணை முதல்வர் உதயநிதி பேட்டி!

புயல் எதிரொலியாக 10 நாட்களுக்கு இதுதான் நிலைமை! துணை முதல்வர் உதயநிதி பேட்டி!

: தமிழ்நாட்டில் வரும் 10 நாட்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

’மோந்தா’ புயல் காரணமாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வடசென்னையில் உள்ள பக்கிங்காம் கால்வாய், கேப்டன் கால்வாய் மற்றும் மணலி சாலையில் உள்ள இணைப்பு கால்வாய் ஆகிய கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “’மோந்தா’ புயல் நாளை கரையை கடக்க உள்ளது. மோந்தா புயலால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு இருக்காது. புயல் ஆந்திரா மாநிலத்தை நோக்கி தான் செல்கிறது. இருந்தாலும் வடசென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் 5 செ.மீ முதல் 7 செ.மீ வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

அதனால், வடசென்னை பகுதியில் 18 கால்வாய்கள், 13 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. சுமார் 331 கி.மீ தூரத்திற்கு கால்வாய்கள் இதுவரை தூர்வாரப்பட்டுள்ளன. மொத்தம் மூன்றரை லட்சம் டன் கழிவுகள் அதிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து புகார்கள் மீதும் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனிவரும் 10 நாட்களுக்கு பெரிய அளவிலான மழை இருக்காது. இருந்தாலும், எவ்வளவு மழை வந்தாலும் அதனை எதிர் கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து மழைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகர ஆணையாளர் குமரகுருபரன், வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, தண்டையார்பேட்டை மண்டல குழுத் தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் மாநகராட்சி அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.