BREAKING: கரையை கடந்தது ‘சென்யார்’ புயல்
மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவிய சென்யார் புயல், இந்தோனேசியாவில் கரையை கடந்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
‘குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்ககடலில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடதமிழகம் - புதுச்சேரி கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
அதேபோல, மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதேபகுதிகளில் நிலவியது. அதன் பிறகு, மேற்கு திசையில் நகர்ந்து, இன்று “சென்யார்” புயலாக மேலும் வலுப்பெற்று, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு இந்தோனேசியா பகுதிகளில் நிலவியது. பிறகு, இன்று காலை 7.30 - 8.30 மணியளவில் இந்தோனேசியாவில் கரையை கடந்தது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர பகுதிகளில் பலத்த தரை காற்று மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
அந்த வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.