சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து: தொலைதொடர்பு மற்றும் இணைய சேவை பாதிப்பு
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால், அந்நிறுவனத்தின் தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா சாலையில் உள்ள கேசினோ திரையரங்கரம் எதிரே பிஎஸ்என்எல் கட்டடம் உள்ளது. இந்த 7 மாடி கட்டடத்தின் 2வது தளத்தில் பிஎஸ்என்எல் மத்திய மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனை பார்த்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் வருவதற்குள்ளாக, அலுவலகம் முழுவதும் தீ பரவி இருந்தது. மேலும், அலுவலகத்தில் மின்சாதன பொருட்கள் முழுவதும் தீயில் கருகின.
தற்போது தீயணைப்புத்துறையினர் 'ஸ்கை லிப்ட்' ராட்சத இயந்திரத்தை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து எழும்பூர், வேப்பேரி, திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புப் படையினரும் தீயை அணைக்க முயன்று வருகிறார்கள்.
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பிஎஸ்என்எல் லேண்ட்லைன், தொலைத்தொடர்பு சேவைகள், இணைய சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சென்னையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலும் தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்து குறித்து சிந்தாதரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட பதிவில், “அண்ணாசாலை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக, மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல, ஆன்லைன் விண்ணப்ப சேவைகள், மின்கட்டண பணப்பரிவர்த்தனை (Bill Payment), மற்றும் கவுன்ட்டர் மூலம் பணம் செலுத்தும் வசதிகள் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். சேவைகளை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது.