ஜனவரி 8-ல் தொடங்குகிறது சென்னை புத்தக திருவிழா
49-வது புத்தக கண்காட்சியை ஜனவரி 8 ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சார்பில் புத்தக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 2026 புத்தக கண்காட்சி மற்றும் பபாசி விருது பெறுபவர்கள் குறித்து பபாசி தலைவர் சண்முகம் மற்றும் குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (டிச.20) செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், “சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 49-வது புத்தக கண்காட்சியை ஜனவரி 8ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த புத்தக திருவிழா ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 21 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறவுள்ளது. அதே போல, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ‘கலைஞர் பொற்கிழி விருது’ (Kalaignar Porkizhi Award - 2026) இந்த ஆண்டும் 6 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த புத்தக திருவிழாவிற்கு 15 - 20 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 25 லட்சம் வாசகர்களையாவது வரவழைப்பது தான் எங்களது நோக்கம்.
கடந்த முறையை விட இந்த ஆண்டு இரு மடங்கு வாசகர்களின் வருகையை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருகிறோம். புதிய படைப்புகளை கொண்டு வரும் முயற்சியில் அனைத்து பதிப்பகங்களும் ஈடுபட்டு வருகின்றன.
புத்தக திருவிழா நடக்கும் மைதானத்தில், வாசகர்களுக்கு தேவையாக குடிநீர், கழிப்பறை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறோம். புத்தக திருவிழாவிற்கு வரும் வாசகர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 என்பதை மாற்றி, இலவச அனுமதி வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான வசதிகளையும் மேம்படுத்தத் திட்டமிட்டு வருகிறோம். கடந்த முறை இருந்த சில பிரச்சினைகளை இம்முறை சரிசெய்ய திட்டமிட்டு வருகிறோம்.
1,000 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பல்வேறு விதமான புதிய புத்தகங்கள் கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு கதை சொல்லுதல், எழுதுதல், வார்த்தை விளையாட்டு போன்றவற்றை இந்த முறை புதிதாக ஏற்பாடு செய்துள்ளோம். புத்தக திருவிழாவின் 14 நாட்களும் சிறந்த பேச்சாளர்கள், நிபுணர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும், பல்வேறு மாநிலங்களிலிருந்து புகழ் பெற்ற பல பப்ளிகேஷன்ஸ் கலந்து கொள்ளும் நிகழ்வும் நடக்கவுள்ளது.
கலைஞர் பொற்கிழி விருதினை கவிதை - கவிஞர் சுகுமார், சிறுகதை - ஆதவன் தீட்சண்யா, நாவல் - இரா. முருகன், உரைநடை - பேராசிரியர் பாரதி புத்திரன், நாடகம் - கருணா பிரசாத், மொழிபெயர்ப்பு - வ.கீதா ஆகிய 6 பேர் பெறுகின்றனர். இவர்களுக்கு புத்தகத் திருவிழா தொடங்கும் ஜனவரி 8 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்குகிறார். அத்துடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை காசோலையையும் வழங்கவுள்ளார்” என்றனர்.