"முற்றிலும் போலி அதிகாரிகள்" - சிபிஐயை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்

"முற்றிலும் போலி அதிகாரிகள்" - சிபிஐயை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்

ஹிமாச்சல பிரதேச மின் உற்பத்தி கழக அதிகாரி விமல் நெகி உயிரிழந்த வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பை (சிபிஐ) உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

ஹிமாச்சல பிரதேச மின் உற்பத்தி கழகத்தில் தலைமை பொறியாளராக இருந்தவர் விமல் நெகி. இவர் கடந்த மார்ச் 10 ஆம் தேதி காணாமல் போன நிலையில், மார்ச் 18 ஆம் தேதி அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. மின் வாரிய அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஹிமாச்சல பிரதேச மின் உற்பத்தி கழக இயக்குநர் தேஷ் ராஜ், தன்னுடன் பணியாற்றும் சீனியர் அதிகாரிகளுடன் இணைந்து விமல் நெகியை மனரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் நெகி குடும்பத்தினர், மின் உற்பத்தி கழக இயக்குநர்கள் ஹரிகேஷ் மீனா, தேஷ் ராஜ் ஆகியோர் விமல் நெகியை தவறு செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டி இருந்தனர். தேஷ் ராஜ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், இந்த வழக்கில் தேஷ் ராஜுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கில் சிபிஐ-யின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விமல் நெகி வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளை விமர்சித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஹ்சனுதின் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு தேஷ் ராஜ் என்பவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளை “முற்றிலும் போலி அதிகாரிகள், பணியில் இருக்க தகுதியற்றவர்கள்” என்று கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும், "சிபிஐ-யில் சீனியர் அதிகாரியாக இருந்து கொண்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இதுபோன்று தான் குழந்தைத்தனமாக கேள்வி கேட்பதா? என்று சாடினார்.

மேலும், "இந்த வழக்கில் அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டவரிடம் என்ன பதிலை எதிர்பார்த்து கேள்விகளை கேட்கிறீர்கள்? அவர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லையென்றால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறுவது தவறு. குற்றம்சாட்டப்பட்டவர் அமைதியாக இருப்பது அவர்களது உரிமை” என்றனர்.