டிசம்பர் 4-ந் தேதி இந்தியா வருகிறார் விளாதிமிர் புதின்
23-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் 2 நாட்கள் பயணமாக டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியா வருகிறார். இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
"பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில், ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 4-ந் தேதி இந்தியா வருகிறார். இந்த பயணத்தின் போது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்" என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் இந்திய பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நட்புறவை முன்னெடுத்து செல்லும் வகையிலும் புடினின் வருகை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது, ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் நரேந்திர மோடியும் பல்வேறு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய-இந்திய உறவுகள் குறித்து இரு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், அதில் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது, ரஷ்ய அதிபர் புதின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்திக்க உள்ளார். அப்போது, ரஷ்ய அதிபருக்கு அவர் சிவப்புக் கம்பள வரவேற்பு மற்றும் விருந்து வைக்கவுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அதிபர் புதினை சந்தித்தார். அப்போது, ரஷ்யாவின் மிர் மற்றும் ரூபே அமைப்புகளின் சேவைகளை இந்தியாவுடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ இஸ்வெஸ்டியாவிடம் தெரிவித்தாக ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ஆர்டி-யும் உறுதிப்படுத்தியுள்ளது.
"இந்த முயற்சி, இந்தியாவிற்கு வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மற்றும் அவர்களுக்கு உதவியாகவும் இருக்கும்" என்று ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ருடென்கோ இஸ்வெஸ்டியாவிடம் இந்திய வெளியறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக ஆர்டி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியது முதல், தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருகிறது. இதனால், மேற்கத்திய நாடுகளுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், புதின் இந்தியா வருகிறார். குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.