ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடுவது ரோஹித், விராட் கோலிக்கு சவால்: சொல்கிறார் ஷேன் வாட்சன்

ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடுவது ரோஹித், விராட் கோலிக்கு சவால்: சொல்கிறார் ஷேன் வாட்சன்

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய அணியின் சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய பிறகு, வரும் 19-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் கூறும்போது, “விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஒரு வடிவத்தில் மட்டும் விளையாடுவது சவாலாக இருக்கும். சிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்
கொள்ள அவர்களின் திறமைகளை மீண்டும் கூர்மைப்படுத்த சில மாற்றங்கள் தேவைப்படும்.

ஆனால் சாம்பியன் வீரர்களை நீங்கள் ஒருபோதும் நிராகரிக்க முடியாது. விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அப்படிதான். சரியான பயிற்சியை கண்டறிய அவர்களுக்கு சிறிது நேரம் ஆகலாம், ஆனால் அவர்கள் அதைச் செய்தவுடன், ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.

உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தேவையான பயிற்சி முறைகளை கண்டுபிடிக்க சிறிது நேரம் ஆகலாம். ஆனால் இந்த இருவரும் ஒரு நாள் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்கள். இதனால் சரியான ஃபார்முலாவைக் கண்டுபிடித்து மீண்டும் சிறந்த நிலைக்குத் திரும்ப அவர்களுக்கு அதிக நேரம் எடுக்காது என்றே கருதுகிறேன். ஏனெனில் அவர்களின் தரமும், நிலைத்தன்மையும் ஒப்பிடமுடியாதவை.

இந்திய வீரர்கள் இப்போது விளையாடும் கிரிக்கெட்டின் பிராண்டை நீங்கள் காணலாம். அது அச்சமற்றது மற்றும் திறமை நிறைந்தது. அவர்களின் முழு திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த ஆண்டு அவர்கள் இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தியதில் ஆச்சரியமில்லை. அதனால்தான் இந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்காமல் உள்ளது.

இந்த சாதனையை ஆஸ்திரேலிய அணியால் தடுத்த நிறுத்த முடியும். ஆனால் அவர்கள் மிகச் சிறப்பாக விளையாட வேண்டும், ஏனென்றால் இந்தியா நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடுகிறது. இவ்வாறு ஷேன் வாட்சன் கூறினார்.