கோடீஸ்வரராக ஆசையா...

நவக்கிரகங்களில் பூரண சுபகிரகம் குரு. இவரே உயர்கல்வி, குழந்தை பாக்கியம், பணத்திற்கு அதிபதி. ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் மட்டுமே வருமானம் பெருகும். இவரது பூரண அருள் இருந்தால் கோடீஸ்வரராக மாறலாம். இந்த யோகத்தைப் பெற குரு வழிபட்ட சிவத்தலமான செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தியான ஆத்தீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.
வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயிலில் கோபுரமோ, மண்டபமோ ஏதுமில்லை. கிராமத்தின் மண் வாசனை மாறாமல் கீற்றுக் கொட்டகையின் கீழே சுவாமி, அம்மன் சன்னதி உள்ளது. வீசும் காற்றிலும், குளத்து நீரிலும் குளுமை உடம்பைத் தாண்டி மனதை தொடுகிறது. வானத்தை தொடும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் மரங்களில், பறவைகள் எழுப்பும் சத்தம் காதருகில் ஒலிக்கிறது.
வாகனங்களின் இரைச்சல், மக்களின் ஆரவாரத்திற்கு நடுவில் கோயில் மட்டும் நிசப்தமாக இருக்கிறது. மூலவர் தியான ஆத்தீஸ்வரர் எளிமையாக காட்சியளிக்கிறார். இவருக்கு 'பனங்காட்டு ஈஸ்வரர்' என்றும் பெயருண்டு. அம்மனின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி. வளர்பிறை வியாழன் அன்று வில்வ அர்ச்சனை செய்து தீபமேற்றி வழிபட்டால் போதும். ஓர் இலையானாலும், ஒரு மலரானாலும், ஒரு பழமானாலும், ஒரு துளி நீரானாலும் அவர் மீது பக்தியுடன் அர்ப்பணித்தால் போதும். திருவுள்ளம் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வார். முடிந்தால் விரதமாக இருப்பது நல்லது. இப்படி தொடர்ந்து மூன்று வாரம் விரதம் இருந்து தரிசித்தால் பணப்பிரச்னை தீரும்.
'என்னை ஈன்ற தாய், என்னை ஆளாக்கும் தந்தை, வழி காட்டும் ஆச்சாரியன் (குரு), எனக்கு உற்ற துணையான தெய்வம் அனைத்தும் நீதான்' என ஆத்தீஸ்வரரின் திருவடிகளை பற்றிக் கொள்ளுங்கள். எந்த துன்பமாக இருந்தாலும் சூரியனைக் கண்ட பனி போல ஓடி விடும்.
எப்படி செல்வது: செங்கல்பட்டில் இருந்து மேலவலம் பேட்டை 20 கி.மீ., அங்கிருந்து காட்டுப் பாதையில் 1 கி.மீ.,
விசேஷ நாள்: ஆடி, மகாளய அமாவாசை, கார்த்திகை சோமவாரம், பிரதோஷம்.
நேரம்: காலை 8:00 - மாலை 6:00 மணி