லோகேஷ் கனகராஜுக்கு முன் சுந்தர்.சி? - ரஜினி முடிவு

லோகேஷ் கனகராஜ் படத்துக்கு முன் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைதளத்தில் காலை முதலே ரஜினியின் அடுத்த படத்தை சுந்தர்.சி இயக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பின் ரஜினி – சுந்தர்.சி கூட்டணி இணையவிருப்பதாகவும், இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், ரஜினி – சுந்தர்.சி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
தற்போது இமயமலையில் இருந்து திரும்பியுள்ள ரஜினி, அடுத்த படத்தை முடிவு செய்ய கதைகள் கேட்டு வருகிறார். இப்போது வரை ரஜினி – கமல் இணைந்து நடிக்கவுள்ள படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட்டணி முடிவாகிவிட்டது.
இதனால் லோகேஷ் கனகராஜ் படத்துக்கு முன்பாக சுந்தர்.சி இயக்கும் படத்தினை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் ரஜினி. இப்படத்தினை முடிப்பதற்குள் லோகேஷ் கனகராஜ் முழுமையாக கதை, திரைக்கதை முடித்து தயாராகி விடுவார். உடனடியாக அந்தப் படத்தினை தொடங்கிவிடலாம் எனவும் முடிவு செய்திருக்கிறார் ரஜினி.