'கணினி தெரியாதவன் கற்றும் கல்லாதவன் ஆகிறான், அதுபோலத்தான் AI' - வைரமுத்து பேச்சு!

'கணினி தெரியாதவன் கற்றும் கல்லாதவன் ஆகிறான், அதுபோலத்தான் AI' - வைரமுத்து பேச்சு!

கணினி தெரியாதவன் கற்றும் கல்லாதவன் ஆகிறான். அடுத்த தலைமுறைக்கு செயற்கை நுண்ணறிவும் அப்படிதான் என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து பேசினார்.

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தனியார் அமைப்பு சார்பாக ''தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லுங்கள், உலக சாதனை வெல்லுங்கள்'' என்னும் தலைப்பில் நடந்த போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு கவிஞர் வைரமுத்து சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது உரையாற்றிய வைரமுத்து, '' நம் நாட்டில் தேசிய கீதம் பாடுவதற்கு கூட பல பேர் கிடைக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்குதான் பலரும் கிடைப்பதில்லை. தேசிய கீதம் சிறந்ததுதான், நாட்டின் உரிமையை பெருமையை நிலைநாட்டும் கீதம்தான். ஆனாலும், தேசிய கீதம் வங்க மொழியில் இயற்றப்பட்டது.

தாகூர் வங்காள மொழியில் இயற்றியதை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் தமிழர்கள், தாய்மொழி தமிழில் உள்ள தமிழ்தாய் வாழ்த்தை பாட முழுவதுமாக தயங்குகிறார்களே என்கிற ஏக்கம் இன்று தீர்ந்தது. குழந்தைகள் மனப்பாடம் செய்யும் போது தான் பெற்றோர்களும், தமிழ்த்தாய் வாழ்த்தை கற்றுக் கொண்டிருப்பார்கள். குழந்தைகள் பெற்றோர்களுக்கு ஆசிரியர்களாக மாறுகிறார்கள். தமிழின் இலக்கணங்களையும், உச்சரிப்பையும் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடும் குழந்தைகள் அதனை கற்கும் போதே கற்றுக் கொள்கிறார்கள்.

தமிழ் பேசுவதற்கு கர்வம் கொள்ள வேண்டும்

எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க டி.எம். சௌந்தரராஜனும், சுசிலாவும் பாடியதுதான் தமிழ்த்தாய் வாழ்த்து. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அனைவரும் வாய்விட்டு பாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உலகம் தோன்றி பேசப்பட்ட பல மொழிகளில் 6 மொழிகள்தான் தற்போது உயிர்ப்போடு உள்ளது. உலக செம்மொழிகளில் தமிழ்தான் தோன்றிய போது இருந்த அதே பெருமையோடு உள்ளது. தமிழனாக பிறந்ததற்கு பெருமை பட வேண்டும், தமிழ் பேசுவதற்கு கர்வம் கொள்ள வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். முதலில் தாய்மொழி, பின்னர்தான் வாய்மொழி. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என தாய்மொழியை தமிழாக கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள்தான். மதத்தால் பிரிக்க வேண்டாம்.

'வடக்கில் இருந்து வரும் காற்றுக்கு வாடை'

இன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய குழந்தைகளை 10-15 வருடங்கள் கழித்து கல்லூரி மாணவர்களாக நான் பார்க்கும் போது, 'இன்றும் நான் எந்த துறைக்கு சென்றாலும் தமிழ் துறையை மறக்கவில்லை' என்று கூறுவதில்தான் எனது உயிர் சிலிர்க்கும். வடக்கில் இருந்து வரும் காற்றுக்கு வாடை எனவும், தெற்கில் இருந்து வரும் காற்றுக்கு தென்றல் எனவும், கிழக்கில் இருந்து வரும் காற்றுக்கு கொண்டல் எனவும், மேற்கில் இருந்து வரும் காற்றுக்கு கோடை எனவும் தமிழன் பெயர் வைத்துள்ளான். இது தமிழை தவிர வேறு எந்த மொழியில் உள்ளது? தமிழை படிக்க கூறுகிறோம்.. தமிழுக்கு என்ன எதிர்காலம் என பலர் கேள்வி கேட்கிறார்கள்.. தமிழ் படித்தால் பொருளீட்ட முடியுமா? அரசு வேலை கிடைக்குமா..? பதவி கிடைக்குமா..? வெளிநாடு செல்ல முடியுமா..? என கேட்கிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவன் நான்

தமிழ் படித்த ராமேஸ்வரம் சிறுவன்தான் இந்திய ஜனாதிபதியான அப்துல் கலாம். அரசுப் பள்ளியில் படித்து 7 தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷனும் பெற்ற சராசரி கிராமத்து மனிதன் நான்.. எனவே தமிழ் படித்தால் குறைவு என நினைக்காதீர்கள்.. தமிழ் படித்துக் கொண்டு பிற தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். இனி கணிப்பொறி, செயற்கை நுண்ணறிவு இல்லாமல் மனிதன் உயிர்வாழ முடியாது.

முதலில் படித்தவன், படிக்காதவன் என இரண்டு பிரிவு இருந்தது. பின்னர் படித்தவனில் கணினி தெரிந்தவன், தெரியாதவன் என பிரிவு இருந்தது. கணினி தெரியாதவன் கற்றும் கல்லாதவன் ஆகிறான். அடுத்த தலைமுறைக்கு செயற்கை நுண்ணறிவும் அப்படிதான்.

தமிழில் அனைத்து அறிவியலையும் கொண்டு வர வேண்டும். தமிழ் அனைத்தையும் செரிக்கும் வல்லமை படைத்தது. தெலுங்கு, உருது, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை செரித்தது. புதிய தொழில்நுட்பங்களை தமிழுக்குள் கொண்டு வர வேண்டும்.'' என பேசினார்.