அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம்

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வைத்திருந்தது, சீன அதிகாரிகளை சந்தித்தது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
64 வயதான ஆஷ்லே டெல்லிஸ். மும்பையில் பிறந்தவர். இந்திய வம்சாவளியான அவர் அமெரிக்க ஆய்வாளர் மற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஆலோசகராக உள்ளார். அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஆஷ்லே டெல்லிஸ் (64). முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பதவிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியது மற்றும் ஓட்டலில் சீன அரசு அதிகாரிகளை சந்தித்து பேசியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஆஷ்லே டெல்லிஸை எப்பிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். முன்னதாக வெர்ஜினியாவில் உள்ள அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அலுவலகங்களில் இருந்த ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார் என்று எப்பிஐ புலனாய்வுத் துறை சிறப்பு ஏஜென்ட் ஜெப்ரி ஸ்காட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2025-ம் ஆண்டு செப்டம்பர் வரை வெர்ஜினியாவில் உள்ள பிரபல ஓட்டலில் சீன அதிகாரிகளை ஆஷ்லே டெல்லிஸ் சந்தித்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஆஷ்லே மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.