தாமதமாகும் மணிகாவின் விசா

இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, வரும் 20-ம் தேதி லண்டனில் நடைபெறும் டபிள் யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடரில் கலந்து கொள்கிறார். அவருடன் சத்தியன், ஹர்மீத் தேசாய், தியாசித்லே ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ள தங்களுக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை என மணிகா பத்ரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், தனது எக்ஸ்வலைதள பதிவில், “நானும் எனது அணி வீரர்களான சத்தியன், ஹர்மீத் தேசாய், தியாசித்லே மற்றும் பயிற்சியாளர்கள் சீனா போட்டி முடிந்த உடன் லண்டனில் நடைபெறும் டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் விளையாடவதற்காக விசாக்களுக்கு விண்ணப்பித்தோம். பயிற்சிக்காக சரியான நேரத்தில் செல்ல அக்டோபர் 17-ம் தேதி பயணம் செய்ய திட்டமிட்டிருந்தேன், ஆனால் எந்த புதுப்பிப்பும் இல்லாததால் இப்போது 19-ம் தேதி காலை செல்ல திட்டமிட்டுள்ளோம்.
இன்றைய நிலவரப்படி, எங்கள் விண்ணப்பங்கள் இன்னும் மதிப்பாய்வில் உள்ளன. எனது முதல் போட்டி அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. போட்டியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக விசா விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ள துரத்திக் கொண்டிருக்கிறேன். அதேவேளையில் மற்ற நாட்டு வீரர்கள் போட்டிக்காக லண்டனுக்கு பறந்து கொண்டிருப்பதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. விசா நடைமுறையில் வழக்கமான செயலாக்க நேரங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் எங்கள் பயணத்திற்கான காரணம் சர்வதேச போட்டியில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துதே, இது வெறும் சுற்றுலாவை விட மேலானது” என தெரிவித்துள்ளார்.