உங்க குழந்தை மண் சாப்பிடுகிறதா? காரணம் மற்றும் தடுக்கும் வழிகள் இதுதான்!

உங்க குழந்தை மண் சாப்பிடுகிறதா? காரணம் மற்றும் தடுக்கும் வழிகள் இதுதான்!

பொதுவாக, குழந்தைகளுக்கு ஒரு வயது நெருங்கும் சமயத்தில் இருந்து இரண்டு வயது வரை கண்ணில் படும் எல்லாவற்றையும் எடுத்துப் பார்ப்பது, வாயில் வைத்துச் சுவைப்பது போன்ற ஆராய்ச்சிப் பழக்கங்கள் (exploratory habits) இருக்கும். இந்தப் பருவத்தைக் கடந்த பிறகும், சில குழந்தைகள் உணவு அல்லாத சில பொருட்களை விரும்பிச் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்வார்கள். அதில், குறிப்பாக குழந்தைக மண் சாப்பிடும் பழக்கம் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தும் ஒரு பொதுவான விஷயமாகும்.

முறையாக உண்ண வேண்டிய உணவுகளைத் தவிர்த்து, மண், தூசி போன்ற எளிதில் கிடைக்கும் பொருட்களைச் சாப்பிடுவது மருத்துவ ரீதியாக "பைகா" (Pica) என்றழைக்கப்படுகிறது. குழந்தைப் பருவத்தின் ஒரு கட்டத்தில் மண், சுண்ணாம்பு, காகிதம், முடி அல்லது பெயிண்ட் போன்ற உணவு அல்லாத பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடுவதை பார்த்திருப்போம். அதன்படி, குழந்தைகள் மண் சாப்பிடும் பழக்கத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? ஏற்படும் விளைவுகள் என்னென்ன? பழக்கத்தை எவ்வாறு தடுப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் மண் சாப்பிடுவதற்கு பல காரணங்கள் உள்ளன, அவை உடல்நலம் மற்றும் மனரீதியான அம்சங்களை உள்ளடக்கியவை என்கிறது NHS ஆய்வு. அவற்றின் விவரம் பின்வருமாறு.

ஊட்டச்சத்துக் குறைபாடு: இதுவே மண் சாப்பிடும் பழக்கத்திற்கான முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. போதுமான இரும்புச்சத்து இல்லாதபோது, அதை ஈடுகட்ட உடல் மண் போன்ற பொருட்களை சாப்பிட தூண்டும். இரும்புச்சத்து போலவே, துத்தநாகம் (Zinc) மற்றும் கால்சியம் (Calcium) போன்ற அத்தியாவசிய தாதுக்களின் குறைபாடும் இந்தப் பழக்கத்தைத் தூண்டலாம். இந்தக் குறைபாடு நீங்கும் போது மண் சாப்பிடும் பழக்கம் குறைய வாய்ப்புள்ளது.

வளர்ச்சி மற்றும் கற்றல்: மிகச் சிறிய குழந்தைகள் தங்கள் சுற்றுப்புறத்தைப் பற்றி அறிந்து கொள்ள அனைத்து பொருட்களையும் வாயில் வைப்பார்கள். இது வளர்ச்சியின் ஒரு சாதாரண பகுதியாகும். இந்த ஆய்வுப் பழக்கத்தின் காரணமாகவும் மண் திங்க நேரலாம். சில சமயங்களில் பசியை உணரும் குழந்தைகள், உணவு இல்லாதபோது, கையில்கிடைத்த மண்ணை வாயில் போட்டு பசியைத் தணிக்க முயற்சி செய்யலாம்.

மனரீதியான மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள்: சில குழந்தைகள் மன அழுத்தம், கவலை அல்லது சலிப்பை எதிர்கொள்ளும் போது, மண் சாப்பிடுவது ஒருவித ஆறுதல் அளிக்கும் பழக்கமாக (Coping mechanism) மாறலாம்.பெற்றோரின் கவனத்தை ஈர்க்க ஒரு வழிமுறையாகவும் இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தலாம்.

மண் சாப்பிடும் பழக்கத்தை எவ்வாறு தடுப்பது?

குழந்தைகள் மண் சாப்பிடும் பழக்கத்தைத் தடுக்கவும், நிர்வகிக்கவும் பெற்றோர் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்கிறது ஆய்வு.

மருத்துவ ஆலோசனை: முதலில், உடனடியாக ஒரு குழந்தைகள் மருத்துவரை அணுகுவது அவசியம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில், குழந்தைக்கு இரும்புச்சத்து, துத்தநாகம் அல்லது பிற தாதுக்கள் குறைபாடு உள்ளதா என்பதை அறிய இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். குறைபாடுகள் கண்டறியப்பட்டால், மருத்துவர் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்டுகள் (Supplements) மற்றும் சத்தான உணவுகளை வழங்குவதன் மூலம் பழக்கம் இயற்கையாகவே நீங்க வாய்ப்புள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை: குழந்தை மண் அல்லது வேறு உணவு அல்லாத பொருட்களை எடுக்க முடியாதவாறு, விளையாடும் பகுதிகளைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும். குழந்தை விளையாடும்போது அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது மிக முக்கியம்.

மாற்றுப் பழக்கங்களை அறிமுகப்படுத்துதல்: குழந்தை எதையாவது வாயில் வைக்க விரும்பினால், சுத்தமான காய்கறித் துண்டுகள் (கேரட்), பழங்கள் அல்லது பிரத்யேக குழந்தை மெல்லும் பொம்மைகள் (Teethers) போன்ற பாதுகாப்பான பொருட்களை வழங்கலாம். குழந்தை மண் திங்க முயலும்போது, அவர்களின் கவனத்தை வேறு ஆரோக்கியமான விளையாட்டு அல்லது செயல்களில் திசை திருப்பலாம்.

மனரீதியான ஆதரவு: குழந்தைக்குப் போதுமான அன்பையும், தனிப்பட்ட நேரத்தையும் ஒதுக்குங்கள். சலிப்பு அல்லது கவனக் குறைபாட்டால் இந்தப் பழக்கம் ஏற்பட்டால், இந்த நடவடிக்கை உதவும். இந்தப் பழக்கத்தை மாற்ற பொறுமையும், தொடர்ச்சியான முயற்சியும் அவசியம்.