வெறும் வயிற்றில் எந்த பழம் சாப்பிடுவது என்ற குழப்பமா? இந்த 5 பழங்கள் பெஸ்ட்!

வெறும் வயிற்றில் எந்த பழம் சாப்பிடுவது என்ற குழப்பமா? இந்த 5 பழங்கள் பெஸ்ட்!

நாளை ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் தொடங்க, சரியான காலை உணவுத் தேர்வு மிக அவசியம். குறிப்பாக, வெறும் வயிற்றில் நாம் உட்கொள்ளும் முதல் உணவு, உடலின் செரிமான மண்டலத்தின் செயல்பாடு, ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் நாள் முழுவதுமான சக்தி மட்டங்களைத் தீர்மானிக்கிறது. அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப் பெற, சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்

நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய என்சைம்கள் நிறைந்த பழங்களை காலை உணவில் சேர்த்து சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சிறந்த எடையை நிர்வகிக்க உதவுகின்றன. அந்த வகையில், அதிகபட்ச பலன்களைப் பெற தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் சிலவற்றை மற்றும் அதன் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

பப்பாளி: பப்பாளி வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற பழங்களில் ஒன்றாகும். இதில் 'பப்பாயின்' (Papain) எனப்படும் ஒரு நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு மகத்தான நன்மைகளைக் வழங்குவதாக NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. பப்பாளியில் ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) நிறைந்துள்ளன. மேலும் இது உணவை இன்னும் திறமையாகச் செரிக்க உதவுகிறது. இது நார்ச்சத்துக்கான ஒரு நல்ல மூலமாகவும், எடை நிர்வாகத்திற்கு உதவுவதாலும், காலை உணவிற்கான சிறந்த பழமாகும்.

ஆரஞ்சு: ஆரஞ்சு மற்றும் அதிக வைட்டமின் சி அளவுள்ள பிற பழங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, அழற்சி எதிர்ப்புப் (Anti-inflammatory) பண்புகளைக் கொண்டுள்ளன. ஆரஞ்சுப் பழங்களில் வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இரும்புச் சத்தை உறிஞ்சவும், நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் உதவுகிறது. இருப்பினும், ஆரஞ்சுப் பழம் இயற்கையில் அமிலத்தன்மை (Acidic) கொண்டிருப்பதால், வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிலருக்கு இது வயிற்றில் அரிப்பை ஏற்படுத்தலாம்.

ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிற பெர்ரி வகைப் பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்றவை. ஸ்ட்ராபெர்ரி நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி போன்ற சத்துக்களின் சிறந்த மூலமாகும். இவை வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை, மேலும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரிகளில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன, மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.

வாழைப்பழம்: வாழைப்பழங்கள் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் C போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இவை செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன் ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதாக 2019ம் ஆண்டு Health Benefits of Green Banana Consumption: A Systematic Review என்ற தலைப்பில் NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும், மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானதாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுபவர்கள் அதன் கூடவே, நட்ஸ், ஓட்ஸ், தயிர் போன்றவற்றை சேர்த்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.