தலித்துகளின் நீதிக்காக போராடுவோம்: சொல்கிறார் காங் எம்பி ராகுல்

தலித்துகளின் நீதிக்காக போராடுவோம்: சொல்கிறார் காங் எம்பி ராகுல்

 ''நாட்டில் தலித்துகளுக்கு எதிராக எங்கு அட்டூழியங்கள் நடந்தாலும், அவர்களுக்கு நீதி கிடைக்க போராடுவோம்'' என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2ம் தேதி உ.பி.,யில் உள்ள ரேபரேலியில் அடித்துக் கொல்லப்பட்ட தலித் இளைஞர் ஹரியோம் வால்மீகியின் குடும்பத்தினரை ராகுல் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: சில நாட்களுக்கு முன்பு ஒரு தலித் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். நான் அங்கு சென்றேன், இன்று நான் இங்கு வந்துள்ளேன். இறந்தவரின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களிடம் பேசினேன்.

அவர்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்துள்ளது. அவர்கள் குற்றவாளிகள் போல் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.அவர்கள் கேட்பது நீதி மட்டுமே. எங்கள் மகன் கொல்லப்பட்டான். கொலை வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நீதி கேட்கிறோம் என தெரிவித்தனர். நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக அட்டூழியங்கள், கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன.

அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று நான் முதல்வரிடம் கேட்க விரும்புகிறேன். அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். அவர்களை பாதுகாக்க முயற்சி செய்ய கூடாது.

காங்கிரஸ் கட்சியும், நானும் குடும்பத்திற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சிப்போம். நாட்டில் தலித்துகளுக்கு எதிராக எங்கு அட்டூழியங்கள் நடந்தாலும், காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும். நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்குவோம். அவர்களின் நீதிக்காகப் போராடுவோம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.