அவமதிப்பு: பொதுமக்களுக்கு ‘காந்தாரா’ படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள்

அவமதிப்பு: பொதுமக்களுக்கு ‘காந்தாரா’ படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள்

கடவுள் கதாபாத்திரத்தினை அவமதிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று ‘காந்தாரா’ படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

பொதுமக்கள் மத்தியில் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே, இப்படத்தில் உள்ள தெய்வ கதாபாத்திரங்களை முன்வைத்து பொதுமக்கள் சிலர் திரையரங்குகளுக்குள், திரையரங்கிற்கு வெளியே என நடிப்பது போன்று சில வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பலரும் இப்படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரம் போல் சத்தமிட்டு ரீல்ஸ் போட தொடங்கினார்கள்.

இந்த விஷயங்களை முன்வைத்து ‘காந்தாரா’ படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை அறிக்கை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அப்படத்தில் வரும் கதாபாத்திரத்தை பொதுவெளியில் யாரும் அவமதிக்க வேண்டாம். ஏனென்றால் அதில் வரும் கடவுள் கதாபாத்திரம் துளு நாடான கர்நாடகாவின் பெருமை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், இப்படத்தினை பொழுதுபோக்கிற்காக உருவாக்கவில்லை எனவும், இது போன்ற அவமதிக்கும் செயல்கள் மத நம்பிக்கையும், துளு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது ‘காந்தாரா’ படக்குழு.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ருக்மணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெளியான முதல் நாளில் இருந்தே ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் 400 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.