ஹங்கேரியில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிறேன்; டிரம்ப் அறிவிப்பு

'ஹங்கேரியில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க உள்ளேன். இந்த சந்திப்பு உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர உதவும்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: நான் இப்போது வரை 8 போர்களை நிறுத்தி வைத்துள்ளேன். இந்த எண்ணை 9வது ஆக மாற்ற விரும்புகிறேன். இரண்டு வாரங்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ, ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்திப்பார். ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசினேன். உக்ரைன் உடனான போர் குறித்து நான் அவரிடம் ஆலோசனை நடத்தினேன்.
அதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் சந்தித்து பேச்சு நடத்த உள்ளேன். அவரிடம் ரஷ்ய அதிபர் புடின் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து பேசுவேன். அவர்கள் இருவருக்கும் இடையே மோசமான உறவு உள்ளது. மத்திய கிழக்கில் அமைதியை கொண்டுவர முயற்சி செய்ததற்கு புடின் என்னை பாராட்டினார். உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களது பேச்சுவார்த்தை உதவியாக இருக்கும்.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான இந்த மோசமான போரை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா என்பதை ஆலோசிக்க, புடினும், நானும் ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட இடத்தில் சந்திப்போம். அப்போது முக்கிய முடிவு எடுப்போம். அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, ரஷ்யா உடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்துவோம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.