இந்த பொருட்களை மாதக்கணக்கில் மாற்றாமல் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கையா இருங்க!

இந்த பொருட்களை மாதக்கணக்கில் மாற்றாமல் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கையா இருங்க!

நீங்கள் தற்போது பயன்படுத்தும் டூத் ப்ரஷ்ஷை எப்போது வாங்கினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? சில சமயம் அதன் முட்கள் தேய்ந்து போகும் வரை சிலர் பயன்படுத்துவார்கள். அதுபோல, குளித்து முடித்து உடலைத் துடைக்கும் துண்டை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தினோம் என்ற கணக்கு கூட இருக்காது. சமையலறையின் பிரிக்க முடியாத அங்கமான, பாத்திரங்களைக் கழுவும் அந்த ஸ்கிரப் அல்லது ஸ்பாஞ்ச், எப்போது வாங்கினோம், அதை எத்தனை முறை சுத்தம் செய்கிறோம் என்றெல்லாம் சிந்திப்பதே இல்லை.

மேலும், தினமும் தலையைச் சீவும் சீப்பை உடைந்து போகும் வரை பயன்படுத்துவது நம்மில் பலரின் வழக்கம். ஆனால் இந்த பொருட்கள் ஒவ்வொன்றும் கிருமிகளின் வசிப்பிடமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, இந்த முக்கியமான பொருட்களின் பயன்பாட்டுக் காலம் மற்றும் அவற்றை எப்போது மாற்ற வேண்டும் என்பதை இந்த தொகுப்பின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

டூத் ப்ரஷ் (Toothbrush): டூத் ப்ரஷை பொதுவாக ஒவ்வொரு 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் அவசியம் என 2018ம் ஆண்டு NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. பல் மருத்துவர்கள் இதை வலியுறுத்துகிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ப்ரஷின் முட்கள் தேய்ந்து, வளைந்து அல்லது பிரிந்து போக ஆரம்பிக்கும். இப்படி தேய்ந்த ப்ரஷால் பற்களின் இடுக்குகளிலும், மேற்பரப்பிலும் உள்ள பிளேக் மற்றும் உணவுத் துகள்களை முழுமையாக அகற்ற முடியாது.

மேலும், பழைய ப்ரஷ்களில் பாக்டீரியாக்கள், ஈஸ்ட் மற்றும் பூஞ்சைகள் போன்ற கிருமிகள் காலப்போக்கில் குடியேற ஆரம்பித்து, வாய்வழி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, முட்கள் வலுவிழக்கும்போது அல்லது 3-4 மாதங்கள் முடிந்தவுடன் உடனடியாக ப்ரஷை மாற்றுவது ஈறு நோய், பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்க உதவும். குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது.

துண்டு (Towel): குளிப்பதற்குப் பயன்படுத்தும் துண்டுகளை அதிகபட்சமாக 2 முதல் 3 முறை பயன்படுத்திய பிறகு கட்டாயம் அலச வேண்டும். ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் துண்டில் ஈரப்பதம் தங்குவதால், கிருமிகள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் எளிதில் வளர ஆரம்பிக்கும். சுகாதாரத்தைப் பேணவும், தோல் ஒவ்வாமைகள் மற்றும் துர்நாற்றத்தைத் தவிர்க்கவும், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறை அலசுவது மிகவும் அவசியம்.

உடல் அல்லது முகம் துடைக்கும் துண்டுகளை அவை கிழிந்து போகும் வரை பயன்படுத்தக்கூடாது. துண்டுகளை அவை பழையதாகவும், மங்கலாகவும், கடினமாகவும் மாறும்போது மாற்றுவது அவசியம். பொதுவாக, துண்டுகளை ஒவ்வொரு 1 முதல் 3 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது.

துண்டுகள் ஈரப்பதம் காரணமாக கிருமிகள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் வளர சிறந்த இடமாக அமைகிறது. அடிக்கடி சலவை செய்தாலும், துணியின் இழைக்குள் நுண்ணுயிரிகள் தங்கிவிடுகின்றன. துண்டுகள் துர்நாற்றம் வீச ஆரம்பித்தால் அல்லது ஈரப்பதத்தை உறிஞ்சும் திறன் குறைந்தால், உடனடியாக மாற்ற வேண்டும். சுத்தமான துண்டைப் பயன்படுத்துவது தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது, இல்லையெனில் தோல் ஒவ்வாமை மற்றும் முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளது.

பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்ச் அல்லது ஸ்கிரப் போன்றவற்றை வீட்டு உபயோகப் பொருட்களிலேயே அதிக கிருமிகள் நிறைந்த ஒன்றாக இருப்பதாக 2022ம் ஆண்டு NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, இதை அடிக்கடி மாற்றுவது கட்டாயம். வாரம் ஒருமுறை அல்லது அதிகபட்சமாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாற்றுவதே மிகவும் பாதுகாப்பானது.

தினமும் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தும் போது, உணவுத் துகள்கள், எண்ணெய், அழுக்குகள் ஆகியவை ஸ்பாஞ்சின் துளைகளில் மாட்டிக்கொண்டு, பாக்டீரியாக்களின் வாழ்விடமாக மாறிவிடும். இது பாத்திரங்களையும் சமையலறையையும் கிருமித் தொற்றுக்கு உள்ளாக்கும். வாரம் ஒருமுறை மாற்ற முடியாவிட்டால், ஒரு நாளைக்கு ஒருமுறை கொதிக்கும் வெந்நீரில் அல்லது ப்ளீச் கலந்த நீரில் ஊறவைத்துச் சுத்தம் செய்ய வேண்டும். ஸ்பாஞ்சில் கெட்ட துர்நாற்றம் வீசினால் அல்லது அது கிழியத் தொடங்கினால் தாமதிக்காமல் உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

 தலை சீவுவதற்குப் பயன்படுத்தும் சீப்பை நிபுணர்களின் கூற்றுப்படி ஆண்டிற்கு ஒருமுறை மாற்றுவது அவசியம். சிலர் சீப்பு உடையும் வரை பயன்படுத்துகிறார்கள், இது தவறானது. சீப்புகளில் இறந்த சரும செல்கள், தலைமுடி, தூசி, எண்ணெய் மற்றும் கிருமிகள் ஒட்டிக்கொள்ளும்.

உச்சந்தலையுடன் நேரடியாக தொடர்பு கொள்வதால், பழைய சீப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் அது பொடுகு, பூஞ்சைத் தொற்றுகள் அல்லது உச்சந்தலையில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பிளாஸ்டிக் சீப்புகளை ஒரு வருடத்திற்குள்ளும், மர சீப்புகளை கவனிப்புடன் நீண்ட காலமும் பயன்படுத்தலாம். எனினும், வாரத்திற்கு ஒருமுறை சீப்பை சோப்பு மற்றும் வெந்நீரில் கழுவி சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்வது நமது ஆரோக்கியத்தை காக்க உதவும்.