ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை! - தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

தீபாவளி பண்டிகை நெருங்குவதை அடுத்து ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை கொண்டு சென்றால் மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்து வருகிறது. சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல அதிக அளவில் சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
அந்த வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதியை கருதி தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக செங்கோட்டை வரை செல்லும் வகையில் சிறப்பு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை மெமு ரயில், மதுரையிலிருந்து தாம்பரம் வரை பகல் நேர மெமு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல் போன்ற பெரிய ரயில் நிலையங்களில் அக்டோபர் 17 முதல் 21 வரை கூடுதல் பயணச்சீட்டு பதிவு சாளரங்கள், தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்களை விரைவாக இயக்க கூடுதல் ஊழியர்கள், ரயில் நிலையங்களில் தேவையில்லாத கூட்டத்தை தவிர்க்க நுழைவு வாயில்களில் தீவிர பயண சீட்டு பரிசோதனை ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பையும் ரயில்வே நிர்வாகம் நாடுகிறது. அந்த வகையில், ரயில்களில் பயணத்தின் போது ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகள், வெடிப் பொருட்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இதை மீறுபவர்கள் மீது ரயில்வே சட்டப்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ரயில்களில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். எனவே பயணிகள் தங்களின் பாதுகாப்பையும், மற்றவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்வே சட்ட திட்டங்களை கடைப்பிடிக்கும்படி ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.