சீன மோசடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் 12 பேர்: சி.பி.ஐ., விசாரணையில் அம்பலம்

சீன மோசடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் 12 பேர்: சி.பி.ஐ., விசாரணையில் அம்பலம்

: சர்வதேச மோசடி கும்பலைச் சேர்ந்த சீன நாட்டவரின் பிடியில், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, 12 பேர் சிக்கி இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச கும்பலுடன் கூட்டு சேர்ந்து, பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த சித்ரவேல், 35, என்பவரை, டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சித்ரவேல் அளித்த வாக்குமூலம் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:விருதுநகர் மாவட்டம், ஆவியூரைச் சேர்ந்த சித்ர வேல், 35, கர்நாடகா மாநிலம், பெங்களூரில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த 2019ல், பெங்களூரில் பதுங்கி இருந்த, சீனாவைச் சேர்ந்த இணையவழி குற்றங்களில் ஈடுபடும் சர்வதேச கும்பலைச் சேர்ந்த குவான்ஹுவா வாங், 40, மற்றும் அவரின் கூட்டாளிகள் இருவருடன் சித்ரவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும், சீன செயலி வாயிலாக பண மோசடி செய்யும் வித்தையை சித்ரவேலுக்கு கற்றுக் கொடுத்தனர். இதற்காக, பெயரளவில் செயல்படும் மூன்று நிறுவனங்களை துவங்கி, அதன் நிர்வாக இயக்குநராக சித்ரவேலுவை நியமித்துள்ளனர்.

சித்ரவேல் தனக்கு கீழ் சிலரை நியமித்து, பண மோசடியை விரிபடுத்தினார். இவரை பயன்படுத்தி, சீன மோசடி கும்பல், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் தங்கள் நாட்டு செயலி வாயிலாக, பண மோசடியில் ஈடுபட வைத்துள்ளது.

அந்த வகையில், சீன மோசடி கும்பலிடம் சைபர் அடிமைகளாக, இம்மூன்று மாநிலங்களைச் சேர்ந்த, 12 பேர் சிக்கி தவிக்கின்றனர் .

கொரோனா பரவல் துவங்கியபோது, குவான்ஹுவா மற்றும் அவரின் கூட்டாளிகள், சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டனர். அதன் பின்னர், சித்ரவேல், 'ஆன்லைன்' முதலீடுகள் தொடர்பாக, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபடுவதை, தன் நிரந்தர தொழிலாக செய்து வந்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.