கடன் பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை! அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்!

கடன் பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை! அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்!

அதிமுக ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்ட கடனுக்கு மட்டும் திமுக அரசு 1.4 லட்சம் கோடி ரூபாய் வட்டி கட்டி வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 14 ஆம் தேதி முதல் தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-வது நாளான இன்று (அக்டோபர் 16) வினாக்கள் விடை நேரம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "2020 - 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் கால முடிவில் வாங்கப்பட்ட கடனுக்கு திமுக அரசு வட்டி கட்டி வருகிறது. அதிமுக விட்டுச் சென்ற கடனுக்கு மட்டும் ரூ.1.4 லட்சம் கோடி ரூபாய் வட்டி கட்டி வருகிறோம்.

அதிமுக ஆட்சியில் மொத்த கடன் இருப்பு 128 சதவீதம் அதிகரித்தது. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டில் 93 சதவீதம் தான் கடன் அதிகரித்துள்ளது. அந்த வகையில் 128 சதவீதம் அதிகமா? 93 சதவீதம் அதிகமா? மொத்த கடன் இருப்பு 128 சதவீதம் அதிகரிக்க செய்த அதிமுகவுக்கு கடன் பற்றி பேச தார்மீக உரிமை இல்லை.

சேராத இடங்களில் போய் சேர வேண்டாம் என்று சொன்னதை மறந்து விட்டு, நீங்கள் போய் சேர்ந்த கட்சி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தொடர்ச்சியாக செயல்படுவது தான் தமிழ்நாட்டின் நிதி நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம்" என குற்றம்சாட்டினார்.

அப்போது பேசிய பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், "ஜிஎஸ்டி குறைப்பால் மத்திய அரசுக்கும் நிதி இழப்பு தான். இருந்தாலும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப் படக்கூடாது என்று தான் மத்திய அரசு இதை செய்தது. இதை சாதாரணமாக எதிர்க்கக் கூடாது" என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஜிஎஸ்டி குறைப்பை நாங்கள் எதிர்க்கவில்லை. மக்கள் பயனடைய வேண்டும் என்று தான் சொல்கிறோம். ஆனால் ஜிஎஸ்டியால் மாநில அரசின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும் போது ஒன்றிய அரசு உரிய தொகையை வழங்க தான் வலியுறுத்துகிறோம். ஒன்றிய அரசுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. ஒன்றிய அரசுக்கு செஸ் வரி இருக்கிறது. மாநிலங்களுக்கு என்ன இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், அவர், கடுமையாக நிதி சுமையால் மாநிலத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் பாதிக்கப்படுவதால் தான் நாங்கள் உரிய நிதி கேட்கிறோம் என்றார்.