சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 208 பேர் சரண்: ஆயுதங்கள் ஒப்படைப்பு

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 208 பேர் சரண்: ஆயுதங்கள் ஒப்படைப்பு

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நக்சலைட்டுகள் 208 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். அவர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட 153 ஆயுதங்களை ஒப்படைத்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று ஜக்தல்பூரில் நக்சலைட்டுகள் 208 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். அவர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட 153 ஆயுதங்களை ஒப்படைத்தனர். இதன் மூலம், அபுஜ்மத்தின் பெரும்பகுதி நக்சல் செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது. சரண் அடைந்தவர்களில் இதுவரையிலான மிகப்பெரிய எண்ணிக்கையில் இதுவும் ஒன்று.

சத்தீஸ்கர் அரசின் மறுவாழ்வு கொள்கை, வீரர்களின் துணிச்சல் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகளின் விளைவாக இது அமைந்துள்ளது. சத்தீஸ்கரின் வடக்கு பஸ்தார் பகுதியில் உள்ள அபுஜ்மர் என்ற வனப்பகுதியில், 170 நக்சல்கள் சரணடைந்ததை அடுத்து, நக்சல் இல்லாத பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இப்போது, ​​தெற்கு பஸ்தார் மட்டுமே நக்சல் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.