ஜாமினில் வெளி வந்த தவெக நிர்வாகிகள் விஜய்யுடன் சந்திப்பு!

ஜாமினில் வெளி வந்த தவெக நிர்வாகிகள் விஜய்யுடன் சந்திப்பு!

கரூர் துயர சம்பவத்தில் கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளி வந்த நிலையில் இருவரும் தங்களது குடும்பத்துடன் தவெக தலைவர் விஜய்யை சந்தித்தனர்.

கரூரில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது கூட்டம் நெரிசலில் 41 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கரூர் போலீசார் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து பொதுச் செயலாளர், துணை பொதுச்செயலாளர் தலைமறைவான நிலையில் மாவட்ட செயலாளர் மதியழகன், நகரச்செயலாளர் பவுன்ராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்பு புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன் பின்பு மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் ஜாமின் கிடைத்து நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

இந்நிலையில் ஜாமனில் வெளி வந்த மாவட்ட செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகிய இருவரும் கரூரில் இருந்து தங்களது குடும்பத்தாருடன் சென்னைக்கு வந்து பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு விஜய்யை இன்று சந்தித்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நடந்தது. விஜய் வருவதற்கு முன்னதாகவே தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி அலுவலகத்தில் இருந்தார். அப்போது தவெக நிர்வாகிகள் இருவரும் குடும்பத்தாருடன் அவரை சந்தித்துப் பேசினர்.

கரூர் கோர சம்பவம்

கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இக் கோர சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. மறுபுறம் விரிவான விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், காவல்துறை சார்பில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது குற்ற எண் 855/25 U/s 105, 110, 125(b), 223 BNS Act & 3 of TNPPDL Act இன் படி 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.